இன்றைய சினிமா திரையுலகில் நடிகர்கள் பெரும்பாலும் அதிக பணம் சம்பாதிக்கவே விரும்புகின்றனர். இதற்காக அவர்கள், பல காதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகின்றனர். ஆனால், வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல், தங்கள் ஆர்வத்தின் பின்னால் ஓடுபவர்கள் சிலர் மட்டுமே.
அப்படி தொலைக்காட்சி துறையில் உச்சத்தில் இருந்த ஒரு நடிகர், மாதம் ரூ.30 லட்சம் வரை வருமானம் ஈட்டும் வாய்ப்பை உதறி தள்ளிவிட்டு, சினிமா கனவுகளை துரத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார். ஆம், நடிகர் லக்ஷ்ய லால்வானி பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

நடிகர் ரன்வீர் அலகாபாடியாவின் யூடியூப் சேனலில் கடந்த 2024-ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் பேசிய லக்ஷ்ய லால்வானி, தனது துணிச்சலான முடிவுக்கு பின்னால் இருந்த காரணங்கள் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். தனது தொலைக்காட்சி வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது, லக்ஷ்யா ஒரு நாளைக்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பாதித்து வந்துள்ளார்.
சினிமாவுக்கு செல்வது குறித்து தனது தந்தையான ரமேஷ் லால்வானியிடம் லக்ஷ்யா பேசியுள்ளார். மேலும், தனது ஒரு நாள் வருமானம் தந்தையின் ஒரு மாத வருமானத்திற்கு சமம் என்று லக்ஷ்யா கூறியுள்ளார். "நீ ஒரு நாளில் சம்பாதிக்கும் பணம் என் ஒரு மாத சம்பளத்திற்குச் சமம், அதனால் இந்த வாய்ப்பை எடுத்துக்கொள்" என்று தனது தந்தை அளித்த அறிவுரையை லக்ஷ்யா எடுத்துக் கொண்டார்.
தொலைக்காட்சி முதல் பாலிவுட் வரை : வெள்ளித்திரையில் நுழைவதற்கு முன், லக்ஷ்யா சின்னத்திரையில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்தார். இவர் 'வாரியர் ஹை', 'அதூரி கஹானி ஹமாரி', 'பியார் டன் க்யா கியா', 'பர் தேஸ் மெய்ன் ஹை மேரா தில்' போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக, 'போரஸ்' தொடரில் அவரது நடிப்புக்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இந்தப் புகழ்பெற்ற நிகழ்ச்சி முடிவடையும் தருவாயில்தான், அவர் பெரிய வாய்ப்புகளை தேடிச் செல்ல முடிவு எடுத்தார்.
லக்ஷ்யா, இயக்குநர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில், தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான 'கில்' (Kill) என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ராகவ் ஜுயல் மற்றும் தன்யா மாணிக்தலா ஆகியோரும் நடித்திருந்த இந்த ஆக்ஷன் திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில், ஆர்யன் கானின் நெட்ஃபிக்ஸ் தொடரான 'தி பார்ட்ஸ் ஆஃப் பாலிவுட்' (The Bards of Bollywood) இல் பாபி தியோல் மற்றும் மனோஜ் பஹ்வாவுடன் இணைந்து நடித்தார். சினிமா உலகில் தனது நிலையை வலுப்படுத்த லக்ஷ்யா தீவிரமாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவர் மும்பையில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்தில் இருந்தார். இதனால் லக்ஷ்யா, முன்னணி இயக்குநருடன் இணைந்து பணியாற்றக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications