மும்பை: விமான நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை வழங்கி வரக்கூடிய இரண்டு நிறுவனங்களில் 99 சதவீத பங்குகளை அதானி நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.
கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் குழுமத்தின் கீழ் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் லிமிடெட் தான் பல்வேறு விமான நிலையங்களையும் கட்டமைப்பது மற்றும் மேலாண்மை செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நிறுவனம் தற்போது விமான நிலையங்களில் பயணிகளுக்கான வரவேற்பு, தங்குமிடம் மற்றும் செக் இன் , அவர்களின் பைகளை சரியாக விமானத்திற்கு கொண்டு சேர்ப்பது , இமிகிரேஷன் செயல்முறை உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வரும் Aviserve மற்றும் Aviground ஆகிய நிறுவனங்களை வாங்கியுள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்களின் 99 சதவீத பங்குகளும் தற்போது அதானி குழுமத்தின் கைவசம் வந்துள்ளது. இந்த நிறுவனங்களில் அதானி குழுமம் தலா 99 லட்சம் ரூபாய் என மொத்தம் 1.98 கோடி ரூபாயை வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்த நிறுவனங்கள் மும்பை விமான நிலையத்தில் விமான இயக்கம் அல்லாத மற்ற விமான நிலைய பணிகள் அனைத்தையும் மேற்கொண்டு வருகின்றன.
2023- 24 ஆம் நிதியாண்டின் படி Aviserve நிறுவனம் 59 .39 கோடி ரூபாய் வருமானத்தையும், Aviground நிறுவனம் 11, 000 கோடி வருமானத்தையும் ஈட்டி உள்ளது. அதானி நிறுவனம் தங்களுடைய விமான நிலைய மேலாண்மை பணிகளை மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக தான் இந்த இரண்டு நிறுவனங்களையும் கையகப்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது . அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டில் தான் விமான நிலையங்களை கட்டமைப்பது மற்றும் மேலாண்மை செய்வதற்காக அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் என்ற நிறுவனத்தை தொடங்கியது.
தற்போது இந்த நிறுவனம் அகமதாபாத், லக்னோ, மங்களூர், ஜெய்ப்பூர் , கௌஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஆறு விமான நிலையங்களை மேலாண்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அது தவிர மேலும் ஆறு விமான நிலையங்களுக்கான ஒப்பந்தத்தையும் பெற்றிருக்கிறது. மும்பை விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகளிலும் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications