இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ், அடுத்த 10 ஆண்டுகளில் தனது விமான நிலைய வர்த்தகத்தில் மட்டும் 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக இக்குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் தான் விமான சேவைகளைக் கையாண்டு வருகிறது. அதானி குழுமத்திற்கு விமான சேவை துறையில் அனுபவம் இல்லை என்றாலும், சந்தையில் இருக்கும் சிறந்த வல்லுனர்களை நியமித்து தற்போது விமான நிலைய நிர்வாகத்தில் அசத்தி வருகிறது.

அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் தற்போது மும்பை, லக்னோ, அகமதாபாத், ஜெய்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் மற்றும் மங்களூரு ஆகிய 7 விமான நிலையங்களைச் சொந்தமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
இதுதவிர மும்பை, அகமதாபாத், ஜெய்பூர், லக்னோ மற்றும் கவுகாத்தி ஆகிய விமான நிலையங்களில் 98 ஏக்கர் பரப்பளவில் நகர வளர்ச்சி திட்டத்தின் முதல் கட்ட பணிகளை அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நகர வளர்ச்சி திட்டத்தில் ஐந்து விமான நிலையங்கள் முதல்கட்டமாகத் துவங்கப்பட்டு உள்ளது, அடித்த சில வருடத்தில் நகர வளர்ச்சி அனைத்து விமான நிலையங்களிலும் நடைபெறும் என்று ஜுகேஷிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
அதானி ஏர்போர்ட்ஸ், விமான போக்குவரத்து அல்லாத வருவாய் பிரிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது, இந்நிறுவனத்தின் வருவாய்க்கும் லாபத்திற்கும் முக்கிய பங்களிப்பை அளிக்கும் வகையில், விமான போக்குவரத்து அல்லாத பிரிவுகளை மாற்ற இலக்காகக் கொண்டுள்ளது அதானி குழுமம். இதன் மூலம் அதானி ஏர்போர்ட்ஸ் விமான போக்குவரத்து வர்த்தகத்தை ஒரு ஹைப்ரிட் வர்த்தகமாக மாற்றுகிறது.
அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனம் மொத்த வருவாயில் 75 சதவீதத்தை விமான போக்குவரத்து அல்லாத வர்த்தகத்திலிருந்து ஈட்ட இலக்கு கொண்டுள்ளது.
தற்போது, ஆறு விமான நிலையங்களில் விமான போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அல்லாத வருவாய் விகிதம் 75:25 ஆக உள்ளது, மும்பை விமான நிலையத்திற்கு இது 50:50 ஆக உள்ளது. இதை 6 விமான நிலையத்திலும் சேர்த்து 25:75 ஆக மாற்ற இலக்காகக் கொண்டு உள்ளது.
அதானி குழுமம், தங்கள் விமான நிலையங்களுக்கு அருகில் நகரப்புற வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விமான நிலைய பயணிகளுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் பயனுள்ள வகையில் வணிக மையங்கள், ஹோட்டல்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் கார்ப்பரேட் அலுவலக இடங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கிணைந்த வளாகத்தை உருவாக்க இலக்கு கொண்டுள்ளது.
இதன் மூலமான போக்குவரத்து அல்லாத வருவாய் தொடர்ந்து பல மடங்கு அதிகரிக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெற்றியின் மூலம் அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் 2028ஆம் ஆண்டுக்குள் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது, அதானி விமான நிலையங்களின் வருவாயில் விமான போக்குவரத்து சார்ந்த வருவாய் பெரும்பான்மையாக உள்ளது. ஆனால், எதிர்காலத்தில் விமான நிலையங்களில் உணவுக்கடைகள், பிற கடைகள் மற்றும் விளம்பரம் போன்ற வசதிகளை வழங்குவதன் மூலம் விமான போக்குவரத்து அல்லாத வருவாயை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதோடு விமான நிலையங்களுக்கு அருகில் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் மூலம் பெரும் தொகையை வருவாயாகப் பெறும். இதன் மூலம் இந்தியாவில் விமான நிலைய வர்த்தகத்தை தலைகீழாக மாற்ற உள்ளது.


Click it and Unblock the Notifications