வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் ஒரு புள்ளியில் இருந்து தான் தொடங்கும் என்று பலர் கூறக் கேள்விபட்டிருப்போம். அதற்கு உதாரணமாக கவுதம் அதானி, தனது 19-ஆவது வயதில் தனது முதல் தொழிலின் மூலம் 10,000 ரூபாய் கமிஷன் பெற்றதாக கடந்த திங்கட்கிழமை அன்று தெரிவித்தார். இன்று கவுதம் அதானியின் மதிப்பை சற்று யோசித்துப் பாருங்கள்! துறைமுகங்கள் முதல் எரிசக்தி வரை பல பில்லியன் டாலர் மதிப்புள்ள பெரிய சாம்ராஜ்யத்தையே கட்டி எழுப்பிய இவர் தனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்.
தனது திறமை, விடா முயற்சி, உழைப்பின் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றை நிறுவி, உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

அகமதாபாத்தில் பிறந்த 62 வயதான கவுதம் அதானி, 16 வயதில் மும்பைக்கு குடிபெயர்ந்து ஒரு வைர நிறுவனத்தில் சேர்ந்தார். அதன் பின் அவர் விரைவாக வர்த்தகத்தில் ஈடுபடத் தொடங்கினார். சுமார் 3 ஆண்டுகளில், மும்பையின் ஜவேரி பஜாரில் தனது சொந்த வைர வர்த்தக நிறுவனத்தைத் தொடங்கினார்.
ஜப்பானில் இருந்த ஒருவர் தனது முதல் வர்த்தகத்தை செய்த நாள் இன்னும் நினைவிருப்பதாகவும், அதற்காக 10,000 ரூபாய் கமிஷன் பெற்றதாகவும், 19 வயதில் தனது தொழில் முனைவோரின் தொடக்கமாக அது அமைந்ததாகவும் அதானி சர்வதேச பள்ளியில் பேசும் போது தெரிவித்தார்.
1981ம் ஆண்டில் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் மஹாசுக்பாய், அகமதாபாத்தில் வாங்கிய ஒரு சிறிய பிவிசி ஃபிலிம் தொழிற்சாலையை நடத்த உதவுவதற்காக குஜராத்துக்கு திரும்பினார். 1988-ஆம் ஆண்டில் அதானி எக்ஸ்போர்ட்ஸ்-இன் கீழ் ஒரு வர்த்தக நிறுவனத்தை அமைத்து 1994-ஆம் ஆண்டில் பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டார். அந்த நிறுவனம் இப்போது அதானி என்டர்பிரைசஸ் என்று அழைக்கப்படுகிறது.
அதிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் குஜராத் கடற்கரையில் உள்ள முந்த்ராவில் அதானி ஒரு துறைமுகத்தையே இயக்கத் தொடங்கினார். அவரது வணிகம் வளர்ந்து இந்தியாவின் மிகப் பெரிய துறைமுக நிறுவனர்களுள் ஒருவரானார். அடுத்தடுத்து மின் உற்பத்தி, சுரங்கம், சமையல் எண்ணெய், எரிவாயு விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என தனது வணிகத்தை விரிவுபடுத்த தொடங்கினார். அவரது வணிக ஆர்வங்கள் விமான நிலையங்கள், சிமெண்ட், சமீபத்தில் ஊடகங்கள் என அனைத்து துறைகளிலும் விரிவடைய தொடங்கின.
இன்று கவுதம் அதானி உலகின் 19-வது பணக்காரராக உள்ளார். அவரது சொத்து மதிப்பு 76 பில்லியன் டாலர்கள். தனது 16-வது வயதில் அகமதாபாத் ரயில் நிலையத்தில் ரயில் டிக்கெட் வாங்கி தனது பாக்கெட்டில் எந்த தொகையும் இல்லாமல் குஜராத்தில் இருந்து மும்பைக்கு சென்றது குறித்தும் அதானி நினைவு கூர்ந்தார். அதோடு தனக்குள் கல்லூரிக்கு செல்லாமல் இருப்பதற்காக வருத்தம் ஏற்படுகிறதோ? என்று அவ்வப்போது தானே கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இன்று இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் அதானி குழுமமும் ஒன்றாக உள்ளது. மாணவர்களிடம் பேசிய அதானி எந்த ஒரு வகுப்பரை சுவர்களும் ஒருவரின் கனவுகளுக்கு வரம்பு அமைக்க கூடாது என்றும் தெரிவித்தார். அதோடு மாணவர்களுக்கு மூன்று முக்கிய கொள்கைகளையும் கூறினார். ஒன்று சிறிய லட்சியங்களை நோக்கி ஓடுவதை தவிர்க்க வேண்டும், எதிர்காலத்திற்காக கற்றுக் கொள்வது முக்கியம். மூன்றாவதாக தங்கள் திறமைகளுக்கு அப்பால் யோசிக்க வேண்டும் என்ற 3 முக்கிய கருத்துகளையும் மாணவர்களிடம் கூறினார்.


Click it and Unblock the Notifications