சென்னை: இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ்-ன் பங்குதாரர்களின் பங்கு மதிப்பை அதிகரிக்கும் இலக்குடன் ஒரு முக்கியமான திட்டத்தை முன்வைத்துள்ளது. இத்திட்டத்தின்படி அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் இருக்கும் உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் பிரிவைத் தனியாகப் பிரித்து அதானி வில்மார் நிறுவனத்துடன் இணைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
அதானி வில்மார் சமையல் எண்ணெய், உணவு மற்றும் எஃப்எம்சிஜி துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் 'ஃபார்ச்சுன்' என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்கிறது. சமையல் எண்ணெய் விற்பனையில் நாட்டின் முன்னணி நிறுவனமாக உள்ளது அதானி வில்மார்.

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் அதானி கம்மாடிட்டீஸ் மூலம் அதானி வில்மாரில் 43.94 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த நிலையில் அதானி என்டர்பிரைசஸ்-ல் இருக்கும் உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் பிரிவை தனியாக பிரித்து, அதை அதானி வில்மார் நிறுவனத்துடன் இணைப்பதற்கு ஈடாக அதானி என்டர்பிரைசஸ் நிறுவன பங்கு முதலீட்டாளர்கள் அனைவருக்கும் அதானி வில்மார் பங்குகள் அளிக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு 500 அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளுக்கு 251 அதானி வில்மார் நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்படும். இது விகித முறையில் ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் பங்குகளுக்கு இணையாக பங்கிட்டு அளிக்கப்படும். இந்த பிரிவில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அதானி கம்மாடிட்டீஸ் நிறுவனத்தில் உள்ள மூலோபரி திட்டமும் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவுகள் இன்று வெளியானது, இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 116 சதவிகிதம் அதிகரித்து 1,454 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 674 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இக்காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 12 சதவிகிதம் அதிகரித்து 25,472 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 22,644 கோடி ரூபாயாக இருந்தது.
சில நாட்களுக்கு முன்பு அதானி வில்மார் நிறுவனத்தில் இந்த நிதியாண்டில் சுமார் ரூ.600 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ அங்கசு மாலிக் (Angshu Malick) தெரிவித்துள்ளார். இந்த 600 கோடி ரூபாய் நிதியைச் சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், நுகர்வோர் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.
இதற்கு முன்னதாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் தொழிற்சாலைகளின் திறனை அதிகரிக்க ரூ.3,400 கோடி முதலீடு செய்யும் திட்டமும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூரின் வில்மார் நிறுவனம் இணைந்து உருவாக்கியது தான் இந்த அதானி வில்மார் நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தின் ப்ரோமோட்டர்கள் சுமார் 88 சதவீத பங்குகளை தற்போது வைத்திருக்கும் வேளையில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நிறுவனத்தின் குறைந்தபட்ச பொதுப் பங்கு உரிமை விதிமுறைக்கு இணங்க 75 சதவிகிதமாகக் குறைக்க வேண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications