இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு மெல்ல மெல்ல மீண்டு வரும் வேளையில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் பல வகையில் உதவி செய்து வந்தது.
இந்த நிலையில் தற்போது இலங்கை பொருளாதாரம், வர்த்தகம் மேம்பட இந்திய நிறுவனங்கள் உதவி செய்து வருகிறது. இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், இலங்கையில் வேலைவாய்ப்பு, வர்த்தகம், பொருளாதாரத்தை உருவாக்கவும் முதலீடு செய்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை இலங்கை அரசு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இந்திய தொழிலதிபர் மற்றும் 2வது பெரும் பணக்காரரான கௌதம் அதானியின் அதானி கிரீன் நிறுவனத்தால் இலங்கையில் அமைக்கப்படும் காற்றாலை மின் நிலையங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
மன்னார் மற்றும் பூனேரின் ஆகிய இடங்களில், அதானி கிரீன் எனர்ஜி காற்றாலை மின் நிலையங்களை அமைக்க உள்ளது. இலங்கை அமைச்சரவை, அதானி கிரீன் சமர்ப்பித்த திட்டத்தை ஆய்வு செய்யவும், மதிப்பீடு செய்யவும் ஒரு சிறப்பு குழுவை நியமித்தது, இந்த ஆய்வு முடிவுகளுக்குப் பின்பு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
வடக்கு இலங்கையில் உள்ள இந்த இரண்டு பகுதிகளிலும் 484 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை அமைப்பதற்காக 442 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஒப்புதல் பெற்றது.
இதை தொடர்ந்து சிறப்பு குழுவின் ஒப்புதலுக்குப் பின்பு மன்னார் மற்றும் பூனேரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
இந்த மாபெரும் முதலீட்டு திட்டத்தின் கீழ் அதானி கிரீன் எனர்ஜி மற்றும் இலங்கை அரசு மத்தியில் 20 ஆண்டுகளுக்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒப்பந்தத்தின்படி, கிலோவாட் (kWh) ஒன்றுக்கு அதானிக்கு 8.26 சென்ட் வழங்கும்.
இந்த வளர்ச்சியின் அறிவிப்பின் எதிரொலியாக, அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் ரூ.1,790 ஆக உயர்ந்தன. காலை 10:10 மணியளவில் பங்குச்சந்தை குறியீடுகள் 0.29 சதவீதம் சரிந்த நிலையில், அதானி க்ரீன் பங்குகள் சுமார் 0.25 சதவீதம் லாபத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications