நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக குழுமங்களில் ஒன்றான அதானி குழுமத்தினை சேர்ந்த நிறுவனம் தான் அதானி கிரீன் எனர்ஜி.
இந்த நிறுவனம் இன்று அதன் டிசம்பர் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. அதன் படி அதன் ஒருங்கிணைந்த லாபமானது முந்தைய ஆண்டினை காட்டிலும் 13.9% அதிகரித்து, 49 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது முந்தைய ஆண்டில் 43 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய்
அதானி குழுமத்தினை சேர்ந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் விகிதமானது 74% அதிகரித்து, 1471 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 843 கோடி ரூபாயாக இருந்தது நினைவுகூறத்தக்கது.
கெளதம் அதானியின் புதுபிக்கதக்க ஆற்றல் நிறுவனத்தின் விற்பனையானது, கடந்த ஆண்டினை காட்டிலும் 67% அதிகரித்து, 6456 மில்லியன் யூனிட்களாக இருந்தது.
செயல்பாட்டு திறன் அதிகரிப்பு
இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் என்பது முந்தைய ஆண்டினை காட்டிலும் 83% அதிகரித்து, 5410 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது.
அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட்டின் நிர்வாக தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வினீத் எஸ்.ஜெயின், தொடர்ச்சியான வலுவான செயல்பாட்டு திறனை கொண்டுள்ளோம். 2030க்குள் நாங்கள் மிகப்பெரிய புதுபிக்கதக்க ஆற்றல் நிறுவனமாக உருவெடுப்போம் என கூறியுள்ளார்.
இன்றைய பங்கு நிலவரம்
அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் என்.எஸ்.இ-யின் பங்கு விலையானது 0.65% அதிகரித்து, 1916.30 முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் இன்றைய உச்சம் 1939.75 ரூபாயாக உள்ளது. இன்றைய குறைந்தபட்ச விலையானது 1870 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி எஸ் இ-யில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 0.53% அதிகரித்து, 1913.30 முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் இன்றைய உச்சம் 1940 ரூபாயாக உள்ளது. இன்றைய குறைந்தபட்ச விலையானது 1871 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 1990 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 860.20 ரூபாயாகும்.
நல்ல வளர்ச்சி காணலாம்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் சமீபத்தில் தான் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டினை அறிவித்தார் கெளதம் அதானி. போட்டியாளரான முகேஷ் அம்பானியும் முதலீடுகளை அறிவித்தார். நாட்டின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் கூட முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியா ஜீரோ கார்பன் உமிழ்வு இலக்கினை அடைய இந்த முதலீடுகள் அவசியமான ஒன்றாக உள்ள நிலையில், எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் மாபெரும் வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications