அதானி குரூப்-ன் வருடாந்திர கூட்டம் இன்று துவங்கிய நிலையில் இக்குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி அனைத்து பங்குதாரர்கள் உடனும் தனது செய்தியை கொண்டு சேர்க்கும் வகையில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ-வில் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேசினார்.
கௌதம் அதானி இந்த வீடியோ-வில் அதானி குழுமத்தின் பெயரை கெடுக்கவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது, எங்களுடைய நிர்வாகம், தகவல் பரிமாற்றம் குறித்து நிலைப்பாடில் உறுதியாக உள்ளோம் என தெரித்தார். ஹிண்டன்பர்க் ரிசர்ச் 2004 முதல் 2015 வரையிலான காலத்தில் நடந்த விஷயங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு தவறான கருத்துக்களை பட்டியலிட்டு உள்ளது.

அதானி குழும நிர்வாகம் 2004 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஏற்கனவே அரசு அமைப்புகளிடம் தெரிவித்துள்ளோம். இந்த நிலையில் அதானி குழுமத்தின் பெயரை கெடுக்கவே பொய்யான தகவல்களை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது என இந்த வீடியோவில் கௌதம் அதானி பேசியுள்ளார்.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியான பின்பு அதானி குழுமம் பல பில்லியன் டாலர்களை வெளிநாட்டு முதலீட்டாலர்களிடம் இருந்து முதலீடாக பெற்றுள்ளது. இதேபோல் எந்தொரு ரேட்டிங் ஏஜென்சியும் அதானி குரூப் மீதான ரேட்டிங்-ஐ குறைக்கவில்லை எனவும் கௌதம் அதானி தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியின் சுழற்சியை கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது, இந்தியா தற்போது 5வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் வேளையில், 2030க்குள் 3வது பெரிய பொருளாதார நாடாக உயரும் என அதானி குரூப் தலைவர் கௌதம் அதானி தெரிவித்தார். மேலும் 2050க்குள் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 40 டிரில்லியன் டாலரை தாண்டும் என கணிக்கப்படுகிறது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியான பின்பும் அதானி குழுமத்தின் நிதிநிலை அறிக்கை, சொத்து, ஆப்ரேட்டிங் கேஷ்ஃப்லோ ஆகியவை வலிமையாக உள்ளது. அதானி குழுமம் தற்போது ஆஸ்திரேலியா, இஸ்ரேல், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடகளிலும், நாடுகளுடனும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது என கௌதம் அதானி தெரிவித்தார்.
அதானி குரூப் நிறுவனங்கள் புதிய வரலாற்றை படைத்துள்ளது, 2022-23 ஆம் நிதியாண்டில் மொத்த EBITDA அளவு 36 சதவீதம் அதிகரித்து 57,219 கோடி ரூபாயாக உள்ளது, மொத்த வருமானம் 85 சதவீதம் அதிகரித்து 2,62,499 கோடி ரூபாயாக உள்ளது. மேலும் வரிக்கு பிந்தைய லாபமாக 23,509 கோடி ரூபாயை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications