அதானி குழுமத்திற்கு 2024ஆம் ஆண்டு மிகவும் போராட்டம் நிறைந்த ஆண்டாக இருந்தாலும், ஒவ்வொரு அடியில் இருந்து கௌதம் அதானி மீண்டு வருவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்து வருகிறார்.
இந்தியாவின் முன்னணி விமான பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் (MRO) சேவை நிறுவனமான ஏர் வொர்க்ஸை (Air Works) கைப்பற்றியதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிகப்படியான விமான நிலையங்களை நிர்வாகம் செய்யும் நிறுவனமாக அதானி ஏர்போர்ட்ஸ் விளங்கும் வேளையில் தற்போது விமானங்களுக்குச் சேவை அளிக்கும் பிரிவில் நுழைய முடிவு செய்துள்ளது.

இதற்காக அதானி குழுமம் Air Works நிறுவனத்தில் பெரும் பங்குகளை, சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதானி டிபென்ஸ் சிஸ்டம்ஸ் & டெக்னாலஜிஸ் லிமிடெட் ஏர் வொர்க்ஸில் 85.8% பங்குகளைக் கையகப்படுத்தியது.
Air Works நிறுவனம் தற்போது 35க்கும் அதிகமான நகரங்களில், 1,300க்கும் மேற்பட்ட திறமையான தொழிலாளர்களைக் கொண்டு விமானங்களுக்கான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த கையகப்படுத்துதல் மூலம், அதானி குழுமம் சிவில் மற்றும் பாதுகாப்பு விமான எம்.ஆர்.ஓ பிரிவில் தேவையை விரிவுபடுத்தும். இதன் வாயிலாக அதானி குழுமம் ஒரு ஒருங்கிணைந்த விமானச் சேவை நிறுவனமாக உருவெடுக்கும்.
ஏர் வொர்க்ஸ் லைன் பராமரிப்பு, கனரக சோதனைகள், ஏவியானிக்ஸ் பராமரிப்பு, விமானத்திற்கு பெயிண்ட் அடித்தல், இன்டிரியரை புதுப்பித்தல் என பல்வேறு விமானச் சேவைகளை வழங்குகிறது. இந்த நிறுவனம் ஓசூர், மும்பை மற்றும் கொச்சியில் முக்கிய கட்டமைப்புகளை வைத்துக்கொண்டு பலதரப்பட்ட விமானங்களுக்கு சேவை அளித்து வருகிறது.
அதானி ஏர்போர்ட்ஸ் இயக்குநர் ஜீத் அதானி, தற்போது உலகின் மூன்றாவது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இருக்கும் இந்தியா, வரும் ஆண்டுகளில் 1,500 க்கும் மேற்பட்ட கூடுதல் விமானங்களை இணைக்கும் திட்டங்களுடன் மேலும் விரிவடையத் தயாராக உள்ளது. இது எம்.ஆர்.ஓ துறைக்குக் கணிசமான வாய்ப்புகளை வழங்குகிறது, இதன் அடிப்படையில் தான் இந்த நிறுவனத்தை வாங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications