ஷாங்காய்: கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம், சீன சந்தையிலும் கால் பதித்துள்ளது. அதானி எனர்ஜி ரிசோர்சஸ் ஷாங்காய் கம்பெனி என்ற துணை நிறுவனத்தை அதானி குழுமம் சீனாவில் நிறுவியுள்ளது. இந்த நிறுவனம் சீனாவில் பொருட்கள் விநியோகத்திற்கான தீர்வுகளையும் திட்ட மேலாண்மை சேவைகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. அதில் சீனாவில் தொடங்கப்பட்டுள்ள அதானி எனர்ஜி ரிசோர்சஸ் நிறுவனம் செப்டம்பர் 2ஆம் தேதி அன்று ஷாங்காயில் சீன நிறுவன சட்டத்தின் கீழ் செயல்பட தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் சீனாவில் பொருட்கள் விநியோக பணிகள் மற்றும் திட்ட மேலாண்மை சேவைகளை பிரதானமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தை பொறுத்தவரை இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் தங்களது தொழில்களை விரிவுபடுத்தியுள்ளது.
அந்த வகையில் சர்வதேச அளவில் முக்கிய சந்தையாக கருதப்படும் சீனாவில் தற்போது கால் பதித்துள்ளது. சீனாவை பொறுத்தவரை பொருள் விநியோக சந்தை என்பது அதிக அளவிலான வாய்ப்புகளை கொண்ட ஒரு பிரிவாக இருக்கிறது. இந்த துறையில் அதானி குழுமம் கால் பதித்திருப்பது அதன் தொழிலை மேலும் வலுப்படுத்த உதவும் என சொல்லப்படுகிறது.
அண்மையில் கூட அதானி குடும்பம் கென்யா நாட்டில் ஏர்போர்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்தை அமைத்தது. அதாவது கென்யா நாட்டில் உள்ள விமான நிலையங்களை மேலாண்மை செய்வதுதான் இந்த நிறுவனத்தின் வேலை ஆகும். அதேபோல விமான நிலைய முதலீடுகள் மற்றும் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக அதானி குழுமம் அபுதாபியில் குளோபல் ஏர்போர்ட் ஆப்பரேட்டர் என்ற துணை நிறுவனத்தை அண்மையில் அமைத்தது.
இதன் மூலம் சர்வதேச அளவில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் திட்ட மேலாண்மை துறையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு அதானி குழுமம் திட்டமிடுவது தெரிய வருகிறது.
அதானி நிறுவனம் ஏற்கனவே சர்வதேச அளவில் சுரங்கம், விமான நிலையம், தரவு மையங்கள் மற்றும் நீர் சார்ந்த உள்கட்டமைப்பு திட்டங்களில் கணிசமான முதலீடு செய்துள்ளது .அதேபோல பல்வேறு நாடுகளிலும் துணை நிறுவனங்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது. தற்போது சீனா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கவனம் செலுத்தி வருகிறது.
அதானி குழுமம், இஸ்ரேல், இலங்கை, தான்சானியா ஆகிய நாடுகளில் துறைமுகங்களை குத்தகைக்கு எடுத்து அவற்றை பராமரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலியா , இந்தோனேசியாவில் சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications