நாட்டின் மிக நீளமானதாக அமையவிருக்கும் கங்கா விரைவு சாலைத் திட்ட கட்டுமான பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
இதற்கிடையில் இந்த திட்டத்தில் பெரும் பகுதியினை அதானி குழுமம் வென்றுள்ளது.
36,230 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தில், 17,085.16 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை அதானி எண்டர்பிரைசஸ் வென்றுள்ளது.
லெட்டர் ஆப் அவார்டு (LoA)
அதானி குழுமத்தினை சேர்ந்த இந்த நிறுவனம், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த மிகப்பெரிய திட்டத்தினை வென்றுள்ளதை அடுத்து, அதானி குழுமத்திற்கு லெட்டர் ஆப் அவார்டு வழங்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய சாலை திட்டம்
உத்தரபிரதேசத்தில் மீரட் மற்றும் பிரக்யாராஜ் மாவட்டங்களை இணைக்கும் இந்த திட்டத்திற்கு மாநில அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. 10 மாவட்டங்களை இணைக்கும் இந்த திட்டம் 594 கிலோ மீட்டர் நீளத்தில் அமையவுள்ளது. இந்த சாலையானது நாட்டில் மிக நீளமான ஒரு விரைவு சாலையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
80% அதானி குழுமத்திற்கே
இந்த நீளமான சாலை திட்டத்தில் 464 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை திட்டத்தினை (80% சாலை) அதானி குழுமம் வென்றுள்ளது. இந்த நீளமான சாலை திட்டத்தினை மூன்று குழுக்களாக பிரித்துள்ளது. இதில் புடானிலிருந்து ஹர்டோய் வரை 151.700 கிலோ மீட்டர் வரையிலும், ஹர்டோயிலிருந்து உன்னாவ் வரை 155.7 கிலோமீட்டர் வரையிலும், உன்னாவிலிருந்து பிரயாக்ராஜ் வரையில் 156.947 கிலோமீட்டர் ஒரு பகுதியாகவும் உள்ளது.
பெருமை அடைகிறோம்
இந்தியா தனது உள்கட்டமைப்பு பணிகளை வேகமாக மேம்படுத்தி வருகின்றது. நாடு முழுவதும் தரமான தார் சாலைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றது. இந்த மாபெரும் திட்டத்தில் அதானி குழுமம் பங்களிப்பதில் நாங்கள் மிகப் பெருமை அடைகிறோம் என்று அதானி இன்ஃப்ரா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கேபி மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.
தற்போதைய திட்டங்கள்
சர்வதேச அளவில் பல்வேறு திட்டங்களில் ஒப்பந்தமாகி வரும் அதானி குழுமம், தற்போது 13 திட்டங்களில், 5,000 கிலோ மீட்டர் தூரமுள்ள திட்டத்தினை கைவசம் வைத்துள்ளது. இதன் மதிப்பு 35,000 கோடி ரூபாயாகும். இது சண்டிகர், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, குஜராத், மேற்கு வங்கம், ஓடிசா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவியுள்ளது. இந்த திட்டங்களில் பல வகையான கலப்பின ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
தற்போதை பங்கு நிலவரம்
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது என் எஸ் இ-யில் 1.22% அதிகரித்து, 1639.70 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 1649 ரூபாயாகும். இதே குறைந்தபட்ச விலை 1627 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-ல் இந்த பங்கின் விலையானது 1.26% அதிகரித்து, 1640.35 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 1648.90 ரூபாயாகும். இதே குறைந்தபட்ச விலை 1627.50 ரூபாயாகும்.
இதே இன்றைய 52 வார உச்ச விலை 1788 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 257.45 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications