இந்தியாவில் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றாக இருக்கும் அதானி குழுமம் ராஜஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக அம்மாநிலத்தில் 7.5 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஜெய்ப்பூரில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்று முடிந்த "ரைசிங் ராஜஸ்தான்" என்ற உலகளாவிய முதலீடு தொடர்பான மாநாட்டில் அதானி குழுமம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எக்கனாமிக்ஸ் சோனின் நிர்வாக இயக்குனரான கரன் அதானி ராஜஸ்தானில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பெருமையாக பேசினார். அவர் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் வெறும் 10 ஆண்டுகளில் இந்தியா 8 ட்ரில்லியன் டாலர்களையும் தாண்டி முதலீடு செய்துள்ளது. நீங்கள் எங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்துகிறீர்கள். உங்களால் இன்று இந்தியா முழுவதிலும் உள்ள குடும்பங்கள் தங்களுடைய கனவுகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் ஒரு சிறந்த நாளை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம்", என்று பெருமையாக பாராட்டி பேசினார்.

இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசிய கரண் அதானி, இனி உலக நாடுகள் இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக பார்க்காது.ஏற்கனவே உலகின் தெற்கு பகுதியின் தலைவராக பார்க்கும். பொருளாதார முன்னேற்றத்தை மரியாதையுடனும், நம்பிக்கையுடனும் வளர்த்து வருவதில் பிற நாடுகளுக்கு நீங்கள் ஒரு முன்னோடி என்று பாராட்டினார்.
அதுமட்டுமின்றி இந்த மாநாட்டிற்கு முன்னதாக நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் சர்மா.. ராஜஸ்தான் அரசு பல்வேறு தொழில் துறைகளுடன் 30 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாக அறிவித்தார்.
இதன்மூலம் இனிவரும் நாட்களில் வெவ்வேறு நிறுவனங்களும் முதலீடு செய்ய தயாராக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஒரு மாநிலத்தில் முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில் அங்கு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்காக ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை இது அதிகரிக்கும்.பொதுவாக ஒரு முன்னணி குழுமம் ஒரு மாநிலத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் அது பிற முதலீட்டாளர்களுக்கும் உந்துதலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications