சர்வதேச பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3 மாதத்தில் வேகமாக வளர்த்து 16வது இடத்தில் சுமார் 73.9 பில்லியன் டாலர் சொத்துடன் இருக்கும் கௌதம் அதானி, தலைமை வகிக்கும் அதானி குழுமம் தனது கையிருப்பில் வைத்திருக்கும் பண இருப்பு, கடன் அளவு உட்படப் பல முக்கியத் தரவுகளை வெளியிட்டு உள்ளது.
அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் நீதிமன்றம் கூறியது, இலங்கை துறைமுகத்திற்குக் கடன் கொடுத்த அமெரிக்க நிதி அமைப்புக் கொடுத்த சர்டிபிகேட், 5 மாநில தேர்தல் அதிரடிகள், 2024 தேர்தல் முடிவுகள் கணிப்பு ஆகியவை அதானி நிறுவனப் பங்குகளுக்குச் சாதகமாக மாறிய நிலையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் அதானி குழுமத்தில் இருந்து பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களில் முதலீடு செய்யும் முன்பு இக்குழுமத்தின் நிதி நிலையை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
அதானி குழும நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் அதாவது முதல் 6 மாத முடிவில் ரொக்க கையிருப்புத் தொகை 13.7 சதவீதம் உயர்ந்து 45,895 கோடி ரூபாயாக இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இந்த மாதம் முழுவதும் இக்குழுமத்தின் வர்த்தகம் மற்றும் வருமானம் ஏறக்குறைய மாறாமல் இருந்தது தான்.
ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான 2023 ஆம் நிதியாண்டின் அரையாண்டு காலகட்டத்தில் அதானி குழுமத்தின் EBITDA அளவு 71,253 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 57,219 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. EBITDA என்பது ஒரு நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் செலவுகள் போக வரி, வட்டி, இழப்பீடு ஆகியவற்றைக் கழிப்பதற்கு முன்பு கணக்கிடப்படும் தொகை.
மேலும் செப்டம்பர் காலாண்டு உடன் முடிந்த 6 மாதத்தில் அதானி குழுமத்தின் மொத்தக் கடன் கடந்த ஆண்டின் நிலையில் இருந்து கிட்டத்தட்ட மாறாமல் அதே 2.26 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் நிறுவனத்தின் ரொக்க கையிருப்பைக் கணக்கிட்டால் கடன் சுமை 1.80 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டு 1.87 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை விடவும் 3.6 சதவீதம் குறைவாகும்.
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அதானி போர்ட்ஸ் & SEZ ஆகியவை அதிக EBITDA வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களாக உள்ளது. இக்குழுமத்தின் மொத்த ரொக்க இருப்பில் சுமார் 37 சதவிகிதம் அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் பங்கீட்டை கொண்டு உள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பெயரில் ரூ.1,03,926 கோடி கடனும், அதானி போர்ட்ஸ் & SEZ ரூ.99,901 கோடி கடனும், அதானி பவர் லிமிடெட் ₹91,742 கோடி கடனும் பெற்றுள்ளது. அதானி குழுமத்தில் குறைவாகக் கடன் சுமை கொண்டு இருப்பது நகர எரிவாயு விநியோக நிறுவனமான அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் தான், இதன் பெயரில் 4,773 கோடி ரூபாய் கடன் மட்டுமே உள்ளது.


Click it and Unblock the Notifications