டாடா மற்றும் ரிலையன்ஸ் குழுமங்களை தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமமாக மாறி வருகிறது அதானி குழுமம். துறைமுக மேலாண்மை, மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விமான நிலைய செயல்பாடுகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது அதானி குழுமம்.
தற்போது இவர்கள் ரீடைல் உணவகத் தொழில்களிலும் களமிறங்க உள்ளனர்.
அதானி குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான அதானி ரியாலிட்டி நிறுவனம், லிங்குடின் உள்ளிட்ட தளங்கள் வாயிலாக ரீடைல் மற்றும் உணவகங்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய இருப்பதாக விளம்பரம் செய்துள்ளது.

அண்மையில் பீனிக்ஸ் மால்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டு வந்த ராஜேந்திர கல்காரை அதானி ரியாலிட்டி நிறுவனம் வேலைக்கு எடுத்துள்ளது. அதானி குழுமத்தின் மால்கள் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட பிரிவின் தலைவராக ராஜேந்திர கல்கார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நகரங்கள் மற்றும் விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உணவகங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளை நிறுவுவதில் அதானி குழுமம் கவனம் செலுத்தி வருகிறது .விமான நிலையங்களுக்கு அருகே பெரிய ஷாப்பிங் மால்கள், மல்டிபிளக்ஸ் மற்றும் உணவகங்கள்,ஸ்பா உள்ளிட்டவற்றை கட்டமைக்கும் திட்டத்தில் அதானி குழுமம் தீவிரமாக இருப்பது தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது .
மும்பை விமான நிலையத்தில் 160 ஏக்கர், லக்னோவில் 100 ஏக்கர், நவி மும்பை பகுதியில் 200 ஏக்கர், ஜெய்பூர் பகுதியில் 17 ஏக்கர் ,திருவனந்தபுரத்தில் 2 ஏக்கர்கள் என்ற அளவில் இந்த நிறுவனம் ஷாப்பிங் மால்கள், மல்டிபிளக்ஸ்,உணவகங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாராவி பகுதியில் மிகப்பெரிய மால் கட்டுவதற்கும் அதானி குழுமம் திட்டமிட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
அதானி ரியாலிட்டி நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய குடிசை வாழ் பகுதியான தாராவியை மறுக்கட்டமைப்பு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அங்கே அலுவலக கட்டடங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவற்றை நிறுவ முடிவு செய்துள்ளது. அண்மையில் அதானி போர்ட் மற்றும் ஸ்பெஷல் எக்னாமிக் ஸோன் பிரிவின் மேலான இயக்குனரான கரண் அதானி ,அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் ஏழு விமான நிலையங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 60 ,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக கூறியிருந்தார்.
தற்போதைக்கு அதானி குழுமம் மும்பை, அகமதாபாத், லக்னோ, மங்களூரு ,ஜெய்பூர் கௌஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களை மேலாண்மை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ரீடைல் கடைகள் மற்றும் உணவகங்களை கட்டமைத்து வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications