இந்தியாவின் உள்கட்டமைப்பு வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இத்துறையின் வளர்ச்சியில் பெரும் ஆதாயத்தை பெற வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் அதானி குழுமம் சிமெண்ட் தயாரிப்பு, விற்பனையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் ஏற்கனவே அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட் ஆகிய இரு நிறுவனங்களை மொத்தமாக வாங்கியிருக்கும் வேளையில், சமீபத்தில் சங்கி இண்ட்ஸ்ட்ரீஸ்-ன் பெரும் பகுதி பங்குகளை வாங்கியது. இதை தொடர்ந்து 4வது சிமெண்ட் நிறுவனத்தை வாங்க களத்தில் இறங்கியுள்ளார் கௌதம் அதானி.

சிகே பிர்லா -வின் ஓரியென்ட் சிமெண்ட் நிறுவன பங்குகளை வாங்க கௌதம் அதானி பேச்சுவார்த்தை நடத்துவதாக சில வாரங்களுக்கு தகவல் வெளியான நிலையில் இதுதொடர்பான தீர்வுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
அதீத கடன் மற்றும் மோசடி காரணமாக திவாலான ஏபிஜி ஷிப்யார்ட் குழும நிறுவனமான வத்ராஜ் சிமென்ட் நிறுவனம் விற்கப்படும் வேளையில் இதை வாங்க அதானி குழுமம், சஜ்ஜன் ஜிண்டாலுக்குச் சொந்தமான ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட் மற்றும் ஆர்சிலர் மிட்டல் குழுமம் ஆகியவை
போட்டியிடுகின்றன.
வத்ராஜ் சிமென்ட் நிறுவனத்திற்கு கடன் கொடுத்த பியூமர் டெக்னாலஜி இந்தியா, நிலுவைத் தொகையை வசூலிக்க ஆகஸ்ட் 2018-ல் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் கடனை திரும்பி கொடுக்க முடியாத காரணத்தால் வத்ராஜ் சிமென்ட் நிறுவழத்தை மூடவும் தீர்வு காணவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வத்ராஜ் சிமென்ட் நிறுவனம் சுமார் 2000 முதல் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏல விண்ணப்பம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது, இந்த நிறுவனத்திற்கு கட்ச் பகுதியில் ஒரு நாளுக்கு 10000 டன் உற்பத்தி தளமும், சூரத் பகுதியில் 6 மில்லியன் சிமெண்ட் கிரைண்டிங் தளமும், சுண்ணாம்பு கல் உரிமையும் உள்ளது.
வத்ராஜ் சிமென்ட் நிறுவனத்தின் பெயரில் சுமார் 7000 கோடி ரூபாய் கடன் உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, யூகோ வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை வத்ராஜ் சிமென்ட் நிறுவனத்திற்கு கடன் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications