இந்தியாவில் டாப் 5 வர்த்தக சாம்ராஜ்ஜியத்தில் ஒன்றாக இருக்கும் அதானி குழுமத்தின் பங்குகள் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கைக்கு பின்பு அதிகப்படியான சரிவை சந்தித்தாலும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அதானி குழுமத்தின் கடன் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 21 சதவீதம் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் இதில் வெளிநாட்டு வங்கிகளின் கடன் பங்கீடு மூன்றில் ஒரு பகுதியாக உயர்ந்துள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தின் மொத்த கடனில் சுமார் 29 சதவீத தொகையை வெளிநாட்டு வங்கிகளிடம் பெற்றுள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் வைத்த குற்றச்சாட்டுகள் முதல் சில வாரங்களுக்கு முன்பு தி கென் வைத்த குற்றச்சாட்டுகள் வரையில் அதானி குழுமம் பெரும்பாலான குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளது. இது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்கள் நம்பிக்கை பெற பல முயற்சிகளை மேற்கொண்டும் வருகிறது.
இந்த நிலையில் அதானி குழுமம் தனது வர்த்தக விரிவாக்கத்திற்காக கடன் பெற்ற வேண்டுமெனில் தற்போது பெற்றுள்ள கடனில் அதிகப்படியான தொகையை செலுத்திய பின்பு தான் பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதை செய்தால் மட்டுமே அதானி குழுமத்தால் debt ratio-வை மேம்படுத்த முடியும்.
தற்போது அதானி குழுமத்தின் net debt-to-Ebitda ratio ஆரோக்கியமான அளவில் உள்ளது, 2019 ஆம் நிதியாண்டில் இந்த அளவீடு 4.1 ஆக இருந்த நிலையில் 2022 மற்றும் 2023 ஆம் நிதியாண்டில் 3.1 முதல் 3.2 ஆக குறைந்துள்ளது. 2013ல் இதன் அளவு 7.6 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் அதானி குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்களின் மொத்த கடன் அளவு மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் 20.7 சதவீதம் உயர்ந்து 2.3 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என ப்ளூம்பெர்க் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தின் கடனில் சுமார் 39 சதவீதம் பத்திரம் வழியான கடனாக உள்ளது, 2016ல் இப்பிரிவு கடன் வெறும் 14 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் உள்நாட்டு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவிலான கடனை அதானி குழுமத்திற்கு கொடுத்துள்ளது. பிப்ரவரி மாத தரவுகள் படி அதானி குழுமத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சுமார் 3.3 பில்லியன் டாலர் அதாவது 27,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை கொடுத்துள்ளது.
அதானி குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்களின் மொத்த கடன் அளவு 2.3 லட்சம் கோடி ரூபாயாக இகுக்கும் வேளையில் மொத்த குழுமத்தின் கடன் கடன் தோராயமாக 3.9 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவித்துள்ளது ப்ளூம்பெர்க்.


Click it and Unblock the Notifications