அதானி குழுமத்தின் முக்கிய வர்த்தக பிரிவாக மாறியுள்ள சிமெண்ட் நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸ், இந்திய சிமெண்ட் துறையில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து மேம்படுத்த சிறு நிறுவனங்களை அடுத்தடுத்து வாங்கி வரும் வேளையில், தற்போது அடுத்தக்கட்ட முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதானி குழுமம் சமீபத்தில் வாங்கிய சங்கி இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பென்னா சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸை அம்புஜா சிமெண்ட்ஸ் உடன் இணைத்து, தனது சந்தை பங்கீட்டையும், உற்பத்தி திறனையும் அதிகரிக்க உள்ளது.

Sanghi Industries: இந்த இணைப்பின் கீழ், சங்கி இண்டஸ்ட்ரீஸின் பங்குதாரர்கள் தங்கள் வைத்தருக்கும் ஒவ்வொரு 100 பங்குகளுக்கு 12 அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகளைப் பெறுவார்கள். இதன் மூலம் அம்புஜா சிமெண்ட்ஸின் மொத்த சிமெண்ட் உற்பத்தி திறனை தற்போதைய நிதியாண்டின் இறுதிக்குள் 100 மில்லியன் டன்னுக்கு மேல் அதிகரிக்கும் இலக்கை அடைய உள்ளது.
கடந்த ஆண்டு, அம்புஜா சிமெண்ட்ஸ் ரூ. 5,185 கோடி என்ற தொகைக்கு சங்கி இண்டஸ்ட்ரீஸை வெற்றிகரமாக கையகப்படுத்தியது.
Penna Cement: இந்தியாவின் தெற்குப் பகுதியில் முக்கியமான சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக இருக்கும் பென்னா சிமெண்ட், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் நான்கு ஒருங்கிணைந்த சிமெண்ட் ஆலைகளையும், மகாராஷ்டிராவில் ஒரு அரைக்கும் அலகையும் இயக்குகிறது.
இந்த நிறுவனம் தற்போது 10 MTPA உற்பத்தி திறனைக் கொண்டுள்ளது. கூடுதலாக, பென்னா சிமெண்ட் கிருஷ்ணபட்டணம் மற்றும் ஜோத்பூரில் தலா 2 MTPA திறன் கொண்ட இரண்டு திட்டங்களைக் செயல்படுத்து வருகிறது, அவை அடுத்த 8-12 மாதங்களில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் கொல்கத்தா, கோபால்பூர், காரைக்கால், கோச்சி மற்றும் கொழும்பு (இலங்கை) ஆகிய இடங்களில் ஐந்து பெருமளவு சிமெண்ட் முனையங்களையும் கொண்டுள்ளது.
Orient Cements: சமீபத்தில், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஒரியண்ட் சிமெண்ட்ஸில் 46.8% பங்கை கையகப்படுத்த ஒப்பந்தம் செய்து, சிமெண்ட் சந்தையில் தனது கால்தடத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இதேபோல் இந்த நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை வாங்கி வரும் காலத்தில் இதையும் இணைக்கும் வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி சிமெண்ட்ஸ் பிரிவு இந்த இணைப்புகள் மற்றும் நிறுவன கைப்பற்றல் மூலம், இந்தியாவின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளரான அம்புஜா சிமெண்ட்ஸ், தனது ஆண்டு உற்பத்தி திறனை 2027-28 ஆம் ஆண்டில் 89 MTPA-லிருந்து 140 MTPA ஆக அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications