கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் மின்சாரம் முதல் துறைமுகம் வரை பல்வேறு வணிகங்களில் கொடி கட்டி பறக்கிறது. அதானி குழுமம் தற்போது தனது வர்த்தகங்களை விரிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக உள்ளது. விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை வெளிநாட்டு கடன் வாயிலாக திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், தனது விமான நிலைய நிறுவனத்துக்கு 75 கோடி டாலர் வெளிநாட்டு கடன் வாங்குவதற்காக பார்க்லேஸ் ஃபர்ஸ்ட், அபுதாபி வங்கி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு உள்ளிட்ட சர்வதேச கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்துக்கு சொந்தமான நிறுவனம் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட். இந்நிறுவனம் நம் நாட்டில் 7 முக்கியமான 7 விமான நிலையங்களை நிர்வகித்து வருகிறது.

தற்போது வாங்க உள்ள வெளிநாட்டு கடனை மூலதன செலவினங்களுக்காகவும், செப்டம்பரில் முதிர்ச்சியடையும் டாலர் கடனை மறுநிதியளிப்பதற்காகவும் பயன்படுத்த அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. கடனின் காலம் 5 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கும். இருப்பினும் கடனுக்கான விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேசமயம், பார்க்லேஸ் பிஎல்சி மற்றும் ஃபர்ஸ்ட் அபுதாபி வங்கியின் பிரதிநிதிகள் இது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு மற்றும் அதானி குழுமமும் வெளிநாட்டு கடன் குறித்து மவுனமாக உள்ளன. இருப்பினும் மே மாத தொடக்கத்துக்குள் இந்த கடன் திரட்டலை முடிக்க அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது.
அதானி குழுமத்தின் இந்த வெளிநாட்டு கடன் வாங்கும் நடவடிக்கை வெற்றி பெற்றால், ஒரு மாதத்திற்குள் அதானியின் இரண்டாவது பெரிய வெளிநாட்டு நிதி திரட்டலாக இது இருக்கும். இந்த மாத தொடக்கத்தில் அதானி குழுமம் தனிப்பட்ட முறையில் பத்திரங்கள் ஒதுக்கீடு மூலம் 75 கோடி டாலரை திரட்டியது. கட்டுமான நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக அதானி நிறுவனம் வெளியிட்ட பத்திரங்களில் மூன்றில் ஒரு பகுதியை முதலீட்டு வங்கியான பிளாக்ரான் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நீதித்துறை அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானிக்கு எதிராக லஞ்சம் தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருவதால், அண்மையில வெளிநாட்டு கடன் வழங்குபவர்கள் அதானி குழுமத்துக்கு கடன் வழங்க தயக்கம் காட்டினர். ஆனால் தற்போது வெளிநாட்டு கடன் வழங்குபவர்கள் அதானி குழுமத்துக்கு கடன் வழங்குவதில் மிகவும் தயங்கவில்லை என்பதற்கு தற்போதைய நிதி திரட்டல் நடவடிக்கை சமீபத்திய அறிகுறியாகும்.
கடந்த மார்ச் மாதத்தில் அரசுக்கு சொந்தமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், அதானி கிரீன் கட்டுமானத்துடன் இணைக்கப்பட்ட கடனை 100 கோடி டாலருக்கு மறுநிதியளித்தது.


Click it and Unblock the Notifications