புதன்கிழமை காலை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் பல நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இன்று தட்டுத்தடுமாறி உயர்வுடன் வர்த்தகமாகி வரும் வேளையில், அதானி பங்குகள் சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்காவின் SEC அமைப்பு.
அதானி குழுமம், கௌதம் அதானி, சாகர் அதானி ஆகியோர் மீது தொடுக்கப்பட்டு உள்ள 265 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கில் அமெரிக்கப் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (SEC) விசாரணை அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் அதானி பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளது.

அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் (SEZ) மற்றும் அதானி கிரீன் எனர்ஜி ஆகியவற்றின் பங்கு விலைகள் 4% வரை குறைந்துள்ளன. அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் அதிகபட்சமாக முறையே 4.3% மற்றும் 4.25% வரை சரிவைக் கண்டன.
அதானி பவர் பங்குகள் 2.54% சரிந்தன, அதே நேரத்தில் அதானி போர்ட்ஸ் பங்குகள் 2.63% குறைந்துள்ளன. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் தலா சுமார் 2.4% சரிவைச் சந்தித்துள்ளன. அதானி குழுமத்திற்கு சொந்தமான சிமெண்ட் நிறுவனங்களான அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி கூட சுமார் 2% வரை பங்கு விலை குறைந்துள்ளன.
அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC), அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளது. SEC அமைப்பின் நியூயார்க் மாவட்ட நீதிமன்றம், அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீதான புகாரை விசாரிக்கவும், அதன் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் இந்திய சட்ட மற்றும் நீதி அமைச்சகத்தின் உதவியை நாடுவதாகத் தெரிவித்துள்ளது.
SEC இன் விசாரணை, பத்திர மோசடி மற்றும் $265 மில்லியன் லஞ்சம் கொடுத்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் மீது நடத்தப்பட்டு வருகிறது. SEC அமைப்பின் இந்த விசாரணை தொடர்பான செய்திகள் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் வாயிலாகவே அதானி குழும பங்குகள் சரிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications