இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் அதானி குரூப் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை வெளியான நிலையில் இருந்து அதிகப்படியான தடுமாற்றத்தையும், சரிவையும் சந்தித்து வரும் வேளையில் GQG பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் முதலீட்டுக்கு அதானி குழும பங்குகள் கணிசமாக உயர்ந்தாலும் கடந்த 7 நாட்களாக பெரிய அளவிலான சரிவை பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி-யின் தலைவர் சரத் பவார்-ஐ சந்தித்து கிட்டத்தட்ட 2 மணிநேரம் பேசியதாக பல ஊடகங்கள் தெரிவித்துள்ளது. சமீபத்தில் சரத் பவார், அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் வைத்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய கூட்டு நாடாளுமன்ற கமிட்டியை அமைக்கும் முடிவை விடவும் சுப்ரீம் கோர்ட் தலைமையிலான கமிட்டி பயனுள்ளதாகவும், சிறப்பாகவும் இருக்கும் என கூறினார்.

அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு, தனது பங்கு விலையை திட்டமிட்டும், செயற்கையாகவும் விலை உயர்த்தியுள்ளதாக குற்றம்சாட்டியது. இதற்காக கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி பல வெளிநாட்டு நிறுவனங்கள் பெயரில் அதானி குழும பங்குகளை வாங்கி சந்தையில் புழக்கத்தை குறைத்து விலை உயர்த்தப்பட்டு உள்ளது என குற்றம்சாட்டியது. இது மட்டும் அதானி குழுமம் பல கணக்கியல் மோசடிகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க தான் கூட்டு நாடாளுமன்ற கமிட்டியை அமைப்பது குறித்து பேச்சுக்கள் அடிப்பட்ட போது சர்த் பவார் கூட்டு நாடாளுமன்ற கமிட்டி அமைப்பது என்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதிக்கத்தின் அடிப்படையில் அமைக்கப்படும். இப்படியிருக்கையில் கூட்டு நாடாளுமன்ற கமிட்டி அமைத்தால் 21 உறுப்பினர்களில் 15 பேர் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களாகவும், 6 பேர் எதிர்கட்சியை சேர்ந்தவராகவும் இருப்பார்கள். இதனால் கூட்டு நாடாளுமன்ற கமிட்டி மீது சந்தேகம் எழும் என சரத் பவார் கூறினார்.

கூட்டு நாடாளுமன்ற கமிட்டிக்கு நான் எதிரானவன் இல்லை, நானும் பல கூட்டு நாடாளுமன்ற கமிட்டியில் இருந்துள்ளேன். நாடாளுமன்ற வலிமையின் அடிப்படையில் கூட்டு நாடாளுமன்ற கமிட்டி அமைக்கப்படும் நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமையிலான கமிட்டி தான் பயனுள்ளதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும் என சரத் பவார் தெரிவித்துள்ளார். இந்த மாத துவக்கத்தில் NDTV சேனல் நேர்காணலில் சரத் பவார், அதானி குழுமத்திற்கு ஆதரவாக இதற்கு முன்பு பல நிறுவனங்கள் குறித்து இத்தகைய அறிவிப்பு வந்துள்ளது என பேசினார்.
இந்த நிலையில் தான் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி-யின் தலைவர் சரத் பவார்-ஐ சந்தித்து கிட்டத்தட்ட 2 மணிநேரம் பேசியதாக பல ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில் இருவரும் எதை பற்றி பேசியுள்ளார்கள் என்பதன் விபரம் வெளியாவில்லை. இதற்கிடையில் தான் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும்பாலும் கடந்த 7 நாட்களாக பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் அதானி குழும பங்கு நிலவரம். அதானி எண்டர்பிரைசஸ் - 0.56 சதவீதம் சரிவு, அதானி போர்ட்ஸ் & SEZ - 1.18 சதவீதம் உயர்வு, அதானி பவர் - 4.69 சதவீதம் உயர்வு, அதானி டிரான்ஸ்மிஷன் - 0.56 சதவீதம் சரிவு, அதானி கிரீன் எனர்ஜி - 0.38 சதவீதம் உயர்வு, அதானி டோட்டல் கேஸ் - 0.26 சதவீதம் சரிவு, அதானி வில்மார் - 0.77 சதவீதம் உயர்வு, அம்புஜா சிமெண்ட் - 0.25 சதவீதம் உயர்வு, ஏசிசி சிமெண்ட் - 0.54 சதவீதம் உயர்வு, NDTV - எந்த மாற்றமும் இல்லை.
2023 ஆம் ஆண்டில் அதாவது ஜனவரி 1 முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில் அதானி குழும பங்குகளின் நிலவரம் அதானி எண்டர்பிரைசஸ் - 52.02 சதவீதம் சரிவு, அதானி போர்ட்ஸ் & SEZ - 18.99 சதவீதம் சரிவு, அதானி பவர் - 34.18 சதவீதம் சரிவு, அதானி டிரான்ஸ்மிஷன் - 60.32 சதவீதம் சரிவு, அதானி கிரீன் எனர்ஜி - 50.28 சதவீதம் சரிவு, அதானி டோட்டல் கேஸ் - 73.85 சதவீதம் சரிவு, அதானி வில்மார் - 31.88 சதவீதம் சரிவு, அம்புஜா சிமெண்ட் - 27.68 சதவீதம் சரிவு, ஏசிசி சிமெண்ட் - 28.77 சதவீதம் சரிவு, NDTV - 45.82 சதவீதம் சரிவு.


Click it and Unblock the Notifications