அதானி குழுமம், இந்திய எரிசக்தித் துறையில் ஓர் அசாத்தியமான முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்கள், பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகள் (BESS) என்ற புதிய துறையில் அடியெடுத்து வைத்து, இந்தியாவின் மிகப்பெரிய BESS மையத்தையும், உலகின் மிக பிரம்மாண்டமான ஒற்றை இட சேமிப்பு மையங்களில் ஒன்றையும் குஜராத் மாநிலம் காவ்டா பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் 2026 மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது.
இந்த திட்டம் குறித்துப் பேசிய அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, "எரிசக்தி சேமிப்பு என்பது, சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறைந்த எதிர்காலத்திற்கான அடித்தளம். இந்த வரலாற்றுத் திட்டத்தின் மூலம், நாங்கள் உலக அளவில் புதிய தரங்களை நிர்ணயிப்பதுடன், இந்தியாவின் எரிசக்தி சுதந்திரம் மற்றும் நிலைத்தன்மைக்கான எங்கள் உறுதிப்பாட்டையும் வலுப்படுத்துகிறோம். இந்தப் பெரிய திட்டம், மக்களுக்கு நம்பகமான, தூய்மையான மற்றும் மலிவான மின்சாரத்தை தொடர்ந்து வழங்க உதவும்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரம்மாண்டத் திறன் மற்றும் தொழில்நுட்பம் : அதானி குழுமத்தின் இந்தப் புதிய BESS திட்டமானது, 1,126 மெகாவாட் மின்சாரத்தை வழங்குவதற்கும், 3,530 மெகாவாட்-மணிநேரம் ஆற்றலைச் சேமித்து வைப்பதற்கும் திறன் கொண்டது. அதாவது, இது சுமார் 3 மணி நேரம் 1,126 மெகாவாட் மின்சாரத்தை தொடர்ந்து வழங்க தேவையான சக்தியைச் சேமித்து வைக்கும். இந்த மையத்தில் 700-க்கும் மேற்பட்ட பெரிய பேட்டரி கன்டெய்னர்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அதிநவீன லித்தியம் அயன் பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் எரிசக்தி மேலாண்மை அமைப்புகள் மூலம் இது இயக்கப்படும்.
மின் கட்டமைப்புக்கு இது மிகவும் அத்தியாவசியமானது. இது, இரவில் சூரிய ஒளி இல்லாத போதும் அல்லது காற்றின் வேகம் குறைந்த போதும், பகலில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தை வழங்கி, 24 மணி நேரமும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யும். இதன் மூலம், காவ்டா பகுதி உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சேமிப்பு மையமாக மாறும்.
அதானி குழுமம் இந்த ஒற்றைத் திட்டத்துடன் நிற்கப் போவதில்லை. அடுத்ததாக, மார்ச் 2027-ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 15 GWh சேமிப்புத் திறனையும், மேலும் 5 ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்தமாக 50 GWh சேமிப்புத் திறனையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கு, இந்தியா தனது 'நெட்-ஜீரோ' (Net-Zero - பூஜ்ஜிய நிகர கரிம உமிழ்வு) மற்றும் பருவநிலை இலக்குகளை அடைய உதவும் ஒரு நவீன, தூய்மையான மின் அமைப்பை உருவாக்குவதில் முக்கியத்துவம் காட்டுகிறது. நாட்டின் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதானி குழுமத்தின் இந்த BESS திட்டம், இந்தியாவின் எரிசக்தி துறைக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications