அதானி குழுமம் சத்தீஸ்கர் மாநிலத்தில் மின்சாரம், சிமெண்ட், கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரூ.75,000 கோடி முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஆகியோர் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து இவை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த முதலீட்டு திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக, ராய்ப்பூர், கொர்பா மற்றும் ராய்கார் ஆகிய இடங்களில் உள்ள அதானி குழுமத்தின் தற்போதுள்ள மின் நிலையங்களை விரிவுபடுத்துவதற்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்கத் திட்டம் சத்தீஸ்கரின் மின் உற்பத்தி திறனை கூடுதலாக 6,120 மெகா வாட் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது இம்மாநிலத்தின் எனர்ஜி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும்.
மேலும், அதானி குழுமம் சத்தீஸ்கர் மாநிலத்திற்குள் தனது சிமெண்ட் தொழிற்சாலைகளின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த முதலீடு மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு பங்களிப்பதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இந்த முக்கிய முதலீடுகளைத் தாண்டி, அதானி குழுமம் அடுத்த நான்கு ஆண்டுகளில் அதானி அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டங்கள் தரமான கல்வி கிடைக்கப்பதை உறுதி செய்யவும், சுகாதார வசதிகளை மேம்படுத்தவும், உள்ளூர் தொழிலாளர்களின் திறன்களை வளர்க்கவும் மற்றும் மாநிலத்தின் சுற்றுலா துறையை ஊக்குவிக்கவும் கவனம் செலுத்தும்.
சத்தீஸ்கர் முதல்வர் அலுவலகம் இந்த முதலீடுகள் மாநிலத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சையை ஏற்படுத்தும், வேலைவாய்ப்பு உருவாக்கும் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications