டெல்லி: இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் அதானி குழும நிறுவனங்களுக்கான தலைவராகவும் கௌதம் அதானி செயல்பட்டு வருகிறார். கௌதம் அதானி குழுமத்தின் பிரதான நிறுவனமாக அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் கீழ் பல்வேறு துணை நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஒரு நிறுவனம் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கி இருக்கிறது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் கீழ் அதானி டிபன்ஸ் சிஸ்டம் அண்ட் டெக்னாலஜிஸ் என்ற ஒரு துணை நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட உபகரணங்களை உற்பத்தி செய்கிறது.

ஏவுகணைகள், டிரோன்கள், சிறிய ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து இந்திய பாதுகாப்பு படைக்கு வழங்கி வருகிறது. இதற்கான பாகங்களை ரஷ்யா, கனடா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. அதானி டிபன்ஸ் நிறுவனம் சில ஏவுகணை பாகங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் போது சுமார் 79 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது .
குறிப்பிட்ட இந்த ஏவுகணை பாகங்கள் சுங்க வரி மற்றும் பிற வரியிலிருந்து விலக்கு பெற்றவை என தவறாக குறிப்பிட்டு 9 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 79 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் விசாரணையை தொடங்கி இருக்கிறது .
இதனிடையே அதானி குழும நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் தந்துள்ளது. வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தங்களிடம் விளக்கம் சில இறக்குமதி தொடர்பாக விளக்கங்களை கேட்டு இருப்பதாகவும் , அதற்கான விளக்கங்களையும் உரிய ஆவணங்களையும் தங்கள் நிறுவனம் வழங்கி விட்டது என்றும் கூறியுள்ளது. எங்கள் பகுதியில் இருந்து நாங்கள் அனைத்து விளக்கத்தையும் ஆவணங்களையும் சமர்ப்பித்து விட்டோம் என தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த விவகாரத்தில் ஏதேனும் வரி ஏய்ப்பு நடந்ததா அந்த பணத்தை அபராதத்துடன் செலுத்தி பிரச்சினையை முடித்தார்களா என்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. 9 மில்லியன் டாலர்கள் என்பது அதானி டிபன்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 10 சதவீத தொகை. மேலும் நிறுவனத்தின் லாபத்தில் பாதிக்கும் அதிகமான தொகை.
சில சமயங்களில் இது போன்ற வழக்குகளில் எவ்வளவு தொகை வரி ஏய்ப்பு நடந்ததோ அதில் நூறு விழுக்காடு அபராதமாக விதிக்கப்படும் அப்படி பார்க்கும் போது அதானி குழுமத்திற்கு 18 மில்லியன் டாலர்கள் அபராதமாக விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வரி ஏய்ப்பு நடந்தது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்த அபராதம் பொருந்தும்.


Click it and Unblock the Notifications