அதானி குழுமம் மீதான அமெரிக்காவின் ஷாட் செல்லரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து வந்த செபி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 14 (இன்று). இந்த நிலையில் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி.
செபி இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் அதானி - ஹிண்டன்பர்க் வழக்கில் குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றம் அடைந்துள்ளோம், விசாரணை முழுமையாகவும், தீர்க்கமாகவும் முடிக்கவும், இறுதி அறிக்கை சமர்பிக்கவும் கூடுதலாக 15 நாள் அவகாசம் தேவை என்ற கோரிக்கை உடன் மனு கொடுத்துள்ளது.

மேலும் இந்த மனுவில் அதானி - ஹிண்டன்பர்க் வழக்கின் விசாரணையில் சில முக்கிய பரிமாற்றங்கள் குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற விருப்பத்தின் பெயரில் நிலுவையில் உள்ள விசாரணையை முடிக்க 15 நாளில் அவகாசம் கொடுக்குமாறும், இதை தொடர்ந்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளது.
அதானி - ஹிண்டன்பர்க் வழக்கு தொடர்பாக 24 பரிமாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது, இதில் 17 பரிமாற்றங்களின் விசாரணை முடித்துள்ளது. நிலுவையில் உள்ள 7 வழக்குகளில் 4 வழக்குகள் விசாரணை முடித்து இறுதி ஒப்புதலுக்காக உரிய துறையிடம் அனுப்பப்பட்டு உள்ளது. மீதமுள்ள 3 பரிமாற்றங்களில் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது இந்த பரிமாற்றங்கள் குறித்து இடைக்கால ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் , 15 நாள் அவகாசம் மூலம் நிலுவையில் இருக்கும் 3 பரிமாற்றம் குறித்த விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்க உள்ளதாக மனுவில் விளக்கம் கொடுத்துள்ளது.
செபி தனது இறுதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 14 ஆம் தேதி கடைசி நாளாக இருந்தாலும், இதுகுறித்த விசாரணை ஆகஸ்ட் 29 ஆம் தேதி தான் நடக்க உள்ளது. இந்த ஆய்வில் அனைத்து பங்குதாரர்களும முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டியது, அதானி குழும தலைவர் போலி வெளிநாட்டு நிறுவனங்கள் வாயிலாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை கூடுதலாக தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்ட செபியின் minimum public shareholding (MPS) விதிமுறைகளை மீறியதா என்பது குறித்து 13 பரிமாற்றங்கள் குறித்து முடிவுகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க பங்கு சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி-க்கு 2 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், மே மாதம் செபி குறைந்தது 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், 3 மாதம் மட்டுமே கொடுத்து ஆகஸ்ட் 14 ஆம் தேதி இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் மே 17ஆம் தேதி தீர்ப்பு கொடுத்தது.
செபியின் ஆய்வுகளையும், ஆய்வின் முடிவுகளையும் சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு குழு ஆய்வு செய்யும். அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தை ஆய்வு செய்யும் சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு குழுவில் திரு ஓ.பி.பட், ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.பி.தேவதத், திரு.நந்தன் நிலகேணி, திரு.கே.வி.காமத், திரு.சோமசேகரன் சுந்தரேசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications