உச்ச நீதிமன்றம் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி (செபி) தாக்கல் செய்த புதிய அறிக்கையை அக்டோபர் 13ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது. இந்த அறிக்கையின் விசாரணையை வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 15 ஆம் தேதி திட்டமிடப்பட்ட நிலையில், இது நடக்கவில்லை.
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி இக்குழுமத்தின் பங்கு கையிருப்பிலும், பங்கு விலையை முறைகேடாக வெளிநாட்டு போலி நிறுவனங்கள் வாயிலாக உயர்த்தி முதலீட்டாளர்களை ஏமாற்றியும், இந்திய சட்ட விதிகளை மீறியதாகவும் பல ஆதாரங்கள், விபரங்கள் உடன் ஹிண்டன்பர்க், OCCRP அமைப்புகள் குற்றச்சாட்டுகளை வெளியிட்டது.

இதன் வாயிலாக அதானி குழுமத்தின் மொத்த சந்தை மூலதனம் ஜனவரி 23 முதல் மார்ச் வரையிலான காலத்தில் 100 பில்லியன் டாலர் வரையில் சரிந்தது. ஆனால் அடுத்தடுத்து முதலீடுகள் பெற்று, வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது என யாரும் எதிர்பார்க்காத வகையில் சில மாதங்களிலேயே அதானி குழுமம் 11 லட்சம் கோடி ரூபாய் என்ற சந்தை மதிப்பீட்டை எட்டியுள்ளது.
ஹிண்டன்பர்க், OCCRP அமைப்புகள் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட், செபி அமைப்புக்கு தனிப்பட்ட வழிக்காட்டுதல்கள் கீழ் விசாரணை செய்ய உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஆக்ஸ்ட் 25 ஆம் தேதி அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த விசாரணையின் அறிக்கையை சமர்ப்பித்தது.
பல மாதங்களாக நடைபெற்ற செபியின் விசாரணையில் எதை கண்டுப்படித்துள்ளது என்பதை வெளிப்படையாக பட்டியலிடாமல் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்ட விபரங்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் கொடுத்து சீல் செய்யப்பட்ட அறிக்கையாக சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் விசாரணையில் விபரங்களை சுப்ரீம் கோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு குழு மட்டுமே அதன் விபரத்தை பார்க்க முடியும், இதை பொதுவெளியில் வெளியிடுவது குறித்து சுப்ரீம் கோர்ட் மற்றும் செபி முடிவு செய்யும்.
செபி அமைப்பின் விசாரணை அறிக்கையின் படி அதானி குழுமம் செய்த 24 பரிமாற்றங்களில் 22 பரிமாற்றங்களின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாகவும், 2 பரிமாற்றங்களின் விசாரணை இடையில் இருப்பதாக சமீபத்திய அறிக்கையில் தெரிவித்தது, தற்போது அக்டோபர் 13 ஆம் தேதி விசாரிக்கப்படும் காரணத்தால் மீதமுள்ள 2 பரிமாற்றங்களின் விசாரணையும் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications