இந்தியாவின் இரண்டாவது பணக்காரரான கௌதம் அதானி கிட்டதட்ட 7.12 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரர். அதானி குழுமம் பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இதில் முக்கியமானது அதானி போர்ட்ஸ். தற்போது அதானி போர்ட்ஸ் நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளது.
அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எக்னாமிக் ஸோன் என அழைக்கப்படும் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.08 லட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் சேவை வழங்குநராக அதானி போர்ட்ஸ் மாறியுள்ளது.

இதற்கு முன்பு பெய்ஜிங்-ஷாங்காய் அதி வேக ரயில் நிறுவனம் தான் இந்த இடத்தை பிடித்திருந்தது. தற்போது அதானி போர்ட்ஸ் அதனை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு வந்துள்ளது.
S&P BSE Sensex Indexஇல் அதானி போர்ட்ஸ் சேர்க்கப்பட்டது மற்றும் இந்நிறுவனம் இயக்கி வரும் துறைமுகங்களில் சரக்கு கையாளுகை அதிகரித்தது ஆகியவையே நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்வதற்கு முக்கிய காரணமாகும்.
இதனிடையே அதானி குழுமம் தங்களின் துறைமுகங்கள் தொழிலுக்காக கூடுதலாக 24,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. குறிப்பாக இந்தியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் துறைமுகங்களில் அதிக கவனம் செலுத்த உள்ளது.
கடன், கையிருப்பு உள்ளிட்டவற்றில் இருந்து இந்த நிதியை திரட்டி ஐரோப்பா, ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மூன்று முக்கிய துறைமுகங்களை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் தங்களின் துறைமுக கையாளுகை திறனை ஆண்டுக்கு 600 மில்லியன் டன்களில் இருந்து 800 மில்லியன் டன்களாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது அதானி போர்ட்ஸ் நிறுவனம் இஸ்ரேல், இலங்கை, இந்தோனேசியா, தான்சானியா, ஆஸ்திரேலியா நாடுகளில் துறைமுகங்களை நடத்தி வருகிறது.
அண்மையில் கூட அதானி போர்ட்ஸ் நிறுவனம் கோபால்பூர் போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 95% பங்குகளை கைப்பற்றி நிறுவனத்தை வாங்கியது. 1,349 கோடி ரூபாய்க்கு அதானி குழுமம் 95% பங்குகளை வாங்கியுள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை 2024 ஆம் நிதி ஆண்டில் இதன் மொத்த வருவாய் 28,210 கோடி ரூபாய் ஆகும்.
இதில் லாபம் மட்டும் 8,559 கோடி ரூபாய் .நிறுவனத்தின் நிகர மதிப்பு 2024 ஆம் நிதி ஆண்டில் 54, 543 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் ஜூன் 20ஆம் தேதி அன்று 1,460 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகின.
Story written by: Devika


Click it and Unblock the Notifications