கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய தனியார் துறைமுக ஆப்ரேட்டராகும். அதானி போர்ட்ஸ் நிறுவனம் வெளிநாடுகளில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தி வருகிறது. தற்போது, ஆஸ்திரேலியாவில் உள்ள வடக்கு குயின்ஸ்லாந்து ஏற்றுமதி முனையத்தை சிங்கப்பூரை தளமாக கொண்ட அபோட் பாயிண்ட் போர்ட் ஹொல்டிங்ஸிடமிருந்து சுமார் 250 கோடி டாலர் மதிப்பீட்டில் (ரொக்கமில்லா ஒப்பந்தம்) கையகப்படுத்துவதாக அதானி போர்ட்ஸ் அறிவித்துள்ளது.
அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு இந்த கையகப்படுத்துதல் மற்றும் ரொக்கம் இல்லாத பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கையகப்படுத்துதல் ஒப்பந்த விதிமுறைகளின்படி, அதானி போர்ட்ஸ் நிறுவனம், கார்மைக்கேல் ரயில் அண்ட் போர்ட் சிங்கப்பூர் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு முன்னுரிமை ஒதுக்கீடு வழியின்கீழ், 14.38 கோடி புதிய பங்குகளை வெளியிடும்.

அதானி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம்தான் இந்த கார்மைக்கேல் ரயில் அண்ட் போர்ட் சிங்கப்பூர் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட். 2011ம் ஆண்டில் அதானி போர்ட்ஸ் நிறுவனம்தான் முதலில் அபோட் பாயிண்டில் உள்ள வடக்கு குயின்ஸ்லாந்து ஏற்றுமதி முனையத்தை 200 கோடி டாலருக்கு கையகப்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, 2013ம் ஆண்டில் அதானி குடும்பம் அதானி போர்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து அதே தொகைக்கு அந்த முனையத்தை வாங்கியது. தற்போது, தனது சர்வதேச இருப்பை வலுப்படுத்த, அந்த முனையத்தை கவுதம் அதானி குடும்பத்திடமிருந்து அதானி போர்ட்ஸ் மீண்டும் வாங்கியுள்ளது.
வடக்கு குயின்ஸ்லாந்து ஏற்றுமதி முனையத்தை கையகப்படுத்தியது தொடர்பாக அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஸ்வினி குப்தா கூறுகையில், இந்த கையகப்படுத்துதல் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துதல், சரக்கு கையாளும் திறனை மேம்படுத்துதல் மற்றும் அடுத்த 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு 25.5 கோடி டாலர் செயல்பாட்டு லாபத்தை அடைவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளில் அதானி போர்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்ட நான்காவது வெளிநாட்டு கையகப்படுத்துதல் இதுவாகும். இதனையடுத்து அதானி போர்ட்ஸ் நிறுவனம் வசம் உள்ள மொத்தம் 19 துறைமுகங்கள் மற்றும் முனையங்கள் உள்ளன. இதில் 15 உள்நாட்டிலும், 4 வெளிநாட்டிலும் உள்ளன. இஸ்ரேலில் ஒரு துறைமுகம் மற்றும் தான்சானியா மற்றும் இலங்கையில் உள்ள முனையங்கள் அதானி போர்ட்ஸ் அண்ட் எக்னாமிக் ஸ்பெஷல் சோன் நிறுவனம் அதன் செயல்பாடுகளை கொண்ட மற்ற 3 சர்வதேச இடங்களாகும்.


Click it and Unblock the Notifications