மும்பையின் பரபரப்பான வணிக பகுதியாக விளங்கும் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) பகுதியில் அமைந்துள்ள அதானி ரியாலிட்டி நிறுவனத்திற்குச் சொந்தமான வணிக வளாகத்தை அதானி குழுமம் நீண்ட கால போராட்டத்திற்குப் பின்பு விற்பனை செய்ய உள்ளது.
என்னது அதானி குழுமம் சொத்துக்களை விற்பனை செய்கிறதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம், அது அதானி குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான அதானி ரியாலிட்டிக்கு சொந்தமான ஒரு அலுவலக கட்டிடம்.

இன்ஸ்பையர் பி.கே.சி என்ற 10 மாடி அலுவலக கட்டிடத்தை விற்பனை செய்ய அதானி ரியாலிட்டி பல வருடங்களாக முயற்சி செய்து வரும் வேளையில், தற்போது அமெரிக்க முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன் குழுமம் உடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த தனியார் ஈக்விட்டி நிறுவனம், 8 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இன்ஸ்பையர் பி.கே.சி அலுவலகக் கட்டிடத்திற்காக ரூ.1,800 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை கொடுக்க தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதானி குழுமத்தின் ரியல் எஸ்டேட் மேம்பாட்டுப் பிரிவு, கடந்த சில ஆண்டுகளாக இந்த 10 மாடி அலுவலகக் கட்டடத்தை விற்பனை செய்து பணமாக்க முயற்சி செய்து வருகிறது. இதற்காக Brookfield India மற்றும் ஷபூர்ஜி பாலோன்ஜி இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் உள்ளிட்ட உலகளாவிய மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுடனும் இதற்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
பிளாக்ஸ்டோன் குழுமமும் முன்னதாக இந்த சொத்தை வாங்க ஆர்வம் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. பல வருடங்களுக்கு பின்பு அதானி ரியாலிட்டியிடம் மீண்டும் இக்கட்டிடத்தை வாங்க ஆர்வம் காட்டியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் கொவிட்-19 தொற்றுநோய் பரவல் மற்றும் அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரிப்பதில் நிச்சயமற்ற தன்மை விளங்கிய காரணத்தால், இந்த பேச்சுவார்த்தை அப்போது தோல்வியில் முடிந்தது. ஆனால் தற்போது அலுவலக தேவைக்கான டிமாண்ட் அதிகரிப்பும், பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) பகுதியின் மதிப்பு உயர்ந்துள்ள காரணத்தால் மீண்டும் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications