மும்பை: ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்-இன்படி, கோடீஸ்வரர் கவுதம் அதானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆகியுள்ளார். அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பில் ஏற்பட்ட அதிகரிப்பைத் தொடர்ந்து, கவுதம் அதானி மீண்டும் முகேஷ் அம்பானியை மிஞ்சி ஆசியாவின் செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த பில்லியனர்ஸ் குறியீட்டின்படி, கவுதம் அதானி தற்போது $ 111 பில்லியன் சொத்து மதிப்புடன் உலகின் 11வது செல்வந்தராக வரிசைப்படுத்தப்பட்டுள்ளார். அதே சமயம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி $ 109 பில்லியன் சொத்து மதிப்புடன் 12வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதானி குழுமத்தின் வளர்ச்சி: வெள்ளிக்கிழமை அன்று அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் 14 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், ரூ. 84,064 கோடி சந்தை மதிப்பு உயர்வுடன், வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில், பட்டியலிடப்பட்ட 10 அதானி குழும நிறுவனங்களின் மதிப்பு ரூ. 17.51 கோடியாக உயர்ந்தது.
2022ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் மந்தமான வளர்ச்சியை சந்தித்தபோதும், அதானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக ஆனார். ஆனால் ஜனவரி 2023 ஆம் ஆண்டு ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியின் அறிக்கைக்கு பிறகு அவருடைய பங்குகள் சரிவை கண்டன. இதனால் அதானியை பின்னுக்குத் தள்ளி அம்பானி முன்னேறினார்.
இதுவரை 2024 ஆம் ஆண்டில், அதானியின் நிகர மதிப்பு $ 26.8 பில்லியன் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் அம்பானியின் சொத்து மதிப்பு $ 12.7 பில்லியன் அதிகரித்துள்ளது என்று ப்ளூம்பெர்க் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.
61 வயது கோடீஸ்வரரான கௌதம் அதானி 1988-இல் தனது சொந்த நிறுவனத்தை உருவாக்கினார். சில நாட்களுக்குப் பிறகு அதனை படிப்படியாக விரிவடையச் செய்தார் கடந்த 10 ஆண்டுகளில் அவருடைய சொத்து அதிகரிக்க தொடங்கியது. மேலும் 2014 ஆம் ஆண்டில் சுமார் $ 5 பில்லியனிலிருந்து, 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் $ 121 பில்லியனாக உயர்ந்தது. சுருக்கமாக சொல்லப்போனால் செப்டம்பர் 2022ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது பணக்காரர் ஆனார்.
கடந்த வாரம் கௌதம் அதானி, அதானி குழும நிறுவனங்களின் வருடாந்திர அறிக்கையில் எதிர்காலம் குறித்து தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினார். இதுகுறித்து பேசிய அவர், சிறந்த நாட்கள் வரவுள்ளன. முன்னோக்கி செல்லும் பாதை அசாதாரணமான சாத்தியக்கூறுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் அதானி குழுமம் இதுவரை இருந்ததை விட இன்று பலமாக உள்ளது என்று தான் உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications