இந்தியாவில் 2வது பெரும் பணக்காரர் மற்றும் மாபெரும் வர்த்தகச் சாம்ராஜியத்தின் தலைவருமான கௌதம் அதானி, ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கார்மைக்கேல் சுரங்கத்தில் இருந்து நிலக்கரியை எடுக்கச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 7 வருடமாகக் கடுமையான எதிர்ப்பும், வழக்குகளும் தொடுத்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக அதானி குரூப் கார்மைக்கேல் சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலக்கரியைச் சந்தைக்குக் கொண்டு வருவதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
நிலக்கரி தட்டுப்பாடு
உலகம் முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நிலக்கரியின் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் மின்சாரத் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குரூப் ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரியை வர்த்தகச் சந்தைக்கு கொண்டு வருவதன் மூலம் மிகப்பெரிய மாற்றம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்மைக்கேல் சுரங்கம்
ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கார்மைக்கேல் சுரங்கம் தான் அந்நாட்டின் கடைசி மற்றும் புதிய வெப்ப நிலக்கரி சுரங்கமாகும். உலகிலேயே மிகப்பெரிய நிலக்கரி ஏற்றுமதி நாடாக இருக்கும் ஆஸ்திரேலியா, இந்தியாவிற்கு முக்கிய நிலக்கரி கூட்டாளியாகவும் விளங்குகிறது.
தல் உயர்தர நிலக்கரி
கார்மைக்கேல் சுரங்கத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட முதல் உயர்தர நிலக்கரி, போவெனில் உள்ள வடக்கு குயின்ஸ்லாந்து ஏற்றுமதி முனையத்தில், திட்டமிட்டபடி ஏற்றுமதிக்குத் தயாராக உள்ளது என அதானி குழுமத்தின் ஆஸ்திரேலியா நாட்டின் கிளையான பிராவஸ் சுரங்கம் & வளங்கள் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எந்த நாட்டுக்கு?
முதல் நிலக்கரி ஏற்றுமதி எந்த நாட்டுக்கு செல்ல உள்ளது என்பது குறித்து இதுவரை வெளியிடவில்லை, ஆனால் கார்மைக்கேல் சுரங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர நிலக்கரியை 10 மில்லியன் டன் அளவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டரை பெற்றுள்ளதாகப் பிராவஸ் சுரங்கம் & வளங்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
60 மில்லியன் டன் நிலக்கரி
2010ஆம் ஆண்டு இந்த மாபெரும் கார்மைக்கேல் சுரங்க திட்டத்தை அதானி குரூப் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவின் கடைசிச் சரங்கமான கார்மைக்கேல் சுரங்கத்தில் இருந்து வருடத்திற்கு 60 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியை ஏற்றுமதி செய்யவும், 11 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 400 கிலோமீட்டர் ரயில் பாதையை அமைத்து நேரடியாகச் சரங்கத்தில் இருந்து ஏற்றுமதி தளத்திற்கு நிலக்கரியைக் கொண்டு வர திட்டமிடப்பட்டது.
"Stop Adani" முழக்கம்
ஆஸ்திரேலியாவில் இத்திட்டத்திற்குச் சுற்றுசூழல் ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து "Stop Adani" என்ற முழக்கத்தை ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவிலும் பரப்பப்பட்ட நிலையில் நிலக்கரி உற்பத்தி அளவு 10 மில்லியன் டன்னாகக் குறைக்கப்பட்டது.
பொருளாதார வளர்ச்சி
தற்போது நிலக்கரி தட்டுப்பாடு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளதால் மின்சார உற்பத்தி செலவுகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இது உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications