இந்திய மக்களின் முக்கிய திருத்தலமான கேதார்நாத் திருகோவிலுக்கு செல்வது எவ்வளவு கடுமையானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒருப்பக்கம் கடும் குளிர், மறுப்புறம் நீண்ட தூர மலை பயணம் என மக்கள் கடும் போராட்டத்திற்கு பின்பு தான் கேதார்நாத் சிவ லிங்கத்தை தரிசிக்க முடியும்.
இந்த 9 மணிநேர கடுமையான கேதார்நாத் பயணம் இனி வெறும் 40 நிமிடத்தில் செய்யப்படும் வகையில் புதிய போக்குவரத்து திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்காக திட்டம் வெளியிடப்பட்டு, ஏல முறையில் ஒரு முக்கியமான நிறுவனமும் வென்றுள்ளது.

இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL), உத்தரகாண்டில் உள்ள சோன்பிரயாக் மற்றும் கேதார்நாத் இடையே 12.9 கிலோமீட்டர் தொலைவு கொண்ட ரோப்வே திட்டத்தை அமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை லிமிடெட் நிறுவனத்திடமிருந்து (NHLML) ஒப்பந்தம் பெற்றுள்ளதாக திங்கட்கிழமை அறிவித்தது.
இந்த முக்கியமான ரோப்வே திட்டம் ரூ.4,081 கோடி மதிப்பிலானது, இந்த திட்டம் தேசிய ரேப்வே மேம்பாட்டு திட்டமான பர்வத்மாலா பரியோஜனாவின் கீழ் பொது-தனியார் கூட்டு (PPP) மாதிரியில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாபெரும் திட்டத்தின் முக்கிய அம்சங்கள், பயணிகளுக்கு ஏற்படும் நன்மைகள் என அனைத்தையும் விரிவாக பார்க்காலம்.
அதானி எண்டர்பிரைசஸின் ரோடுஸ், மெட்ரோ, ரயில் மற்றும் வாட்டர் (RMRW) பிரிவால் இந்த 12.9 கிலோமீட்டர் ரோப்வே திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம், ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பக்தர்களை ஈர்க்கும் கேதார்நாத் கோயிலுக்கு பயணிக்கும் நேரத்தை கடுமையான 9 மணி நேர பயணத்தில் இருந்து வெறும் 36 நிமிடங்களாக குறைக்கும்.

ஒவ்வொரு மணி நேரமும் ஒரு திசையில் 1,800 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் இந்த ரேப்வே வழித்தடம். இந்தத் திட்டம், கேதார்நாத் பயணத்தை எளிதாக்குவதற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். மேலும் முதியவர்களுக்கு கேதார்நாத் சிவனை தரிசிக்க ஒரு முக்கியமான வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
அதானி நிறுவனம் இந்தத் திட்டத்தை ஆறு ஆண்டுகளில் கட்டி முடிக்கும், அதன் பிறகு 29 ஆண்டுகளுக்கு இந்த வழித்தடத்தை இயக்கும். இந்த நீண்டகால ஒப்பந்தம், உத்தரகாண்டின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரோப்வே திட்டம், உத்தரகாண்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு, அம்மாநில பொருளாதாரத்திற்கு புதிய ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கட்டுமானம் மற்றும் இயக்கம், பல ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications