அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள 12 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், தகவல் வெளியீட்டு விதிமுறைகளையும், முதலீட்டு வரம்புகளையும் மீறியுள்ளதாக இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது என ரய்ட்டர்ஸ்-யிடம் இரு நபர்கள் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
இதுகுறித்து செபி அமைப்போ, அதானி குழுமமோ இதுவரையில் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 12 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் தகவல் வெளியீட்டு விதிமுறைகள் மற்றும் வெளிநாட்டு நிதிகளின் முதலீட்டு வரம்புகள் தொடர்பான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதைச் செபி கண்டறிந்ததாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து செபி அதானி குழுமத்தின் முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுவது போல் இருக்கும் ஒரு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனத்தைக் குறிவைத்துச் செபி ஆய்வு செய்யும் பணிகளைத் துவங்கியது. ஆனால் அதானி குழுமம் இத்தகைய செயல்பாடுகள் ஏதுமில்லை என செபியின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்திருந்தது.
இதை தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில், விதிமுறைகளை மீறியது தொடர்பாக அதானி குழுமத்தின் 12 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கும் செபி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ்-க்கான பதில் தான் தற்போது வழக்கின் முக்கிய திருப்பமாக உள்ளது.
"வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், அதானி குழும நிறுவனங்களில் தங்கள் முதலீட்டை தனித்தனி நிதி நிறுவன நிலையில் அறிவித்து வந்தன. ஆனால், ஒட்டுமொத்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் குரூப் அளவில் முதலீட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று செபி உத்தரவிட்டது" என தகவல் வெளியாகியுள்ளது..
இந்த நிலையில் தற்போது செபி நோட்டீஸ் அனுப்பிய பன்னிரண்டு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களில் 8 முதலீட்டு நிறுவனங்கள், விதிமுறைகளை மீறியது தொடர்பான தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் அபராதம் மட்டும் செலுத்திக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கச் செபி அமைப்பிற்கு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அனுப்பியுள்ளன. இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முறையற்ற வகையில் முதலீடு செய்துள்ளது உறுதியாகியுள்ளது.
செபி அமைப்பின் இந்த கடும் நடவடிக்கை, பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. முதலீட்டு விதிமுறைகளையும், தகவல் வெளியீட்டு விதிமுறைகளையும் கடைப்பிடிப்பது அவசியம்.


Click it and Unblock the Notifications