இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமாக வளர்ந்து வரும் அதானி குழுமம், தங்களது போர்ட்ஃபோலியோவில் சென்னை உட்பட பல்வேறு சர்வதேச விமான நிலையங்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு சர்வதேச விமான நிலையங்களை தனியார்மயமாக்கியது. அப்போது 6 சர்வதேச விமான நிலையங்களை நிர்வகிக்கும் உரிமம் அதானி குழுமத்துக்கு கிடைத்தது.

இந்நிலையில் கூடுதலாக பல்வேறு விமான நிலைய செயல்பாடுகளை குத்தகைக்கு எடுக்க அதானி குழுமம் முடிவு செய்துள்ளது. அரசு அண்மையில் 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. இதில் அதானி குழுமம் பங்கேற்க முடிவு செய்துள்ளது.
அரசுக்கு சொந்தமான 30 முதல் 35 விமான நிலையங்கள் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் தனியார்மயமாக்கப்பட உள்ளன என அதானி என்டர்பிரைசஸ் அண்மையில் வெளியிட்ட ஒரு தகவலில் தெரிவித்துள்ளது.
தற்போது அதானி குழுமம் திருவனந்தபுரம், மங்களூரு, அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் கௌஹாத்தி ஆகிய ஆறு சர்வதேச விமான நிலையங்களை நிர்வாகம் செய்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டென்டரில் அதானி குழுமம் இந்த ஆறு விமான நிலையங்களையும் மேலாண்மை செய்வதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியது. அதேபோல மும்பை விமான நிலையத்தின் மேலாண்மை பணிகளை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜிவிகே நிறுவனத்திடம் இருந்து வாங்கியது.
இந்தியாவில் 23 சதவிகித விமான நிலைய செயல்பாடுகள் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. தற்போது அதானி குழுமம் கூடுதலாக விமான நிலையங்களை குத்தகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான சவுரப் ஷா கூறுகையில், இந்தியாவில் அடுத்த கட்டமாக எந்தெந்த விமான நிலையங்கள் தனியார்மயமாகின்றன என்பது குறித்து நாங்கள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம், பொது தேர்தலுக்குப் பிறகு இதற்கான டெண்டர் அறிவிப்புகள் வெளியாகும். இதில் 100% நாங்கள் இந்த ஒப்பந்த புள்ளிகளை கூறுவோம் எனக் கூறியுள்ளார்.
இந்தியாவில் விமான நிலைய மேலாண்மையில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது அதானி குழுமம். விரைவில் சென்னை, புவனேஸ்வர், வாரணாசி ஆகிய சர்வதேச விமான நிலையங்களும், கயா, தர்மசாலா உள்ளிட்ட சிறிய விமான நிலையங்களும் தனியார்மயமாக்கப்படும் விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. எனவே இவற்றை கைப்பற்றும் முயற்சியில் அதானி குழுமம் இறங்க உள்ளது.
அதானி குழுமத்திற்கு விமானநிலைய செயல்பாடுகள் மூலம் ஓராண்டு காலத்தில் 35 சதவிகிதம் வருவாய் அதிகரித்துள்ளது.2024 ஆம் ஆண்டு மார்ச் மாத காலாண்டில் அதானி கட்டுப்பாட்டில் உள்ள ஏழு சர்வதேச விமான நிலையங்களில் புதிதாக 10 வழித்தடங்கள், 7 புதிய விமான சேவை நிறுவனங்கள் மற்றும் 18 புதிய விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த விமான நிலையங்களில் பயணிகளின் வரத்து என்பது 19% அதிகரித்துள்ளது. தற்போது அதானி குழுமத்தை பொறுத்தவரை அதற்கு வருவாய் ஈட்டி தரக்கூடிய முக்கியமான துறையாக விமான நிலைய தொழில் இருந்து வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications