கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் அதானி வில்மர் லிமிடெட் நிறுவனத்தில் தங்களுக்கு சொந்தமான பங்குகளை மொத்தமாக விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து அதானி வில்மர் நிறுவனம் அதானி குழுமத்திலிருந்து வெளியேறி தனி நிறுவனமாக செயல்பட போகிறது. இவ்வாறு தனி நிறுவனமாக பிரிந்தவுடன் நிறுவனத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி வில்மர் நிறுவனம் மேற்கொண்டு உணவு மற்றும் எஃப்எம்சிஜி துறையில் அதிக முதலீடுகளை மேற்கொண்டு செயல்படும் என்று நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அங்குஸ் மல்லிக் தெரிவித்துள்ளார் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் அதானி வில்மர் நிறுவனத்தில் பணியாற்றி வரக்கூடிய அங்குஸ் மில்லக் தனி நிறுவனமாக மாறிய பிறகு அதன் பெயர் ஏடபுள்யூஎல் அக்ரி பிசினஸ் (AWL Agri Business ) என பெயர் மாற்றம் செய்யப்படும் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து பங்குதாரர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் எஃப்எம்சிஜி மற்றும் சமையல் எண்ணெய் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வணிகத்தை அதானி வில்மர் நிறுவனம் கையில் வைத்திருக்கிறது.
1999 ஆம் ஆண்டு அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனமும் சிங்கப்பூரின் வில்மர் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனமும் இணைந்து கூட்டு நிறுவனமாகத் தான் அதானி வில்மரை தொடங்கின.
இந்த நிறுவனம் இந்தியாவில் 23 இடங்களில் தொழிற்சாலைகளை கொண்டிருக்கிறது. சமையல் எண்ணெய், கோதுமை மாவு ,அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட இந்தியர்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் அதானி குழுமம் அதானி வில்மர் நிறுவனத்தில் தங்கள் வசம் இருக்கும் பங்குகளை முழுமையாக விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அதானி வில்மர் தனி நிறுவனமாக செயல்பட இருக்கிறது .
இந்த நிலையில் தங்கள் நிறுவனம் பெயர் மாற்றி வைக்கப்பட்டு இந்திய சந்தையில் தொடர்ந்து செயல்படும் என்று அங்குஸ் மல்லிக் தெரிவித்துள்ளார். 2026 ஆம் நிதியாண்டில் தங்கள் நிறுவனம் பல்வேறு புதிய பொருட்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
குயிக் காமர்ஸ் நிறுவனங்களோடு இணைந்து தங்கள் நிறுவனம் புதிய புதிய தயாரிப்புகளை விற்பனை செய்ய இருக்கிறது என கூறியுள்ளார். குறிப்பாக சூப்பர் சேவர் பேக்குகள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் கிராமப்புற பகுதிகளில் தங்கள் நிறுவன பொருட்களின் விநியோகத்தை அதிகப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2025 மார்ச் மாதம் இறுதிக்குள் தங்களின் கிராமப்புற விநியோக நெட்வொர்க்கை இந்தியாவில் 50,000 கிராமங்கள் வரை விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications