லண்டன்: பெரும்பாலான இந்திய பணக்காரர்கள் பிரிட்டனில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர். பெரும் பணக்காரர்களுக்கு பிரிட்டனில் சொத்துக்களை வைத்திருப்பது ஒரு கவுரவமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் லண்டனில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான மிக ஆடம்பரமான ஒரு ஹோட்டல் ஸ்டோக் பார்க் பகுதியில் செயல்பட்டு வருகிறது.
2020 ஆம் ஆண்டில் அம்பானி 529 கோடி ரூபாய்க்கு இந்த ஹோட்டலை வாங்கினார். 49 படுக்கை அறைகள் 13 டென்னிஸ் விளையாட்டு மையங்கள் மற்றும் 14 ஏக்கர் பரப்பில் பிரைவேட் கார்டன் மற்றும் கோல்ஃப் கோர்ஸ் என பிரம்மாண்டமான முறையில் இந்த ஹோட்டல் அமைந்திருக்கிறது.

தற்போது முகேஷ் அம்பானியை மிஞ்சும் வகையில் பிரபல மருந்து நிறுவனத்தின் உரிமையாளரான அதர் பூனாவல்லா லண்டனில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு சொத்தினை வாங்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் அதர் பூனவல்லா. இவர் லண்டனில் 1444 கோடி மதிப்பிலான ஒரு வீட்டினை வாங்கி இருக்கிறார்.
நூற்றாண்டு கால பழமையான இந்த வீடானது ஹைட் பார்க் பகுதியில் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் பிரிட்டனில் சீரம் லைஃப் சயின்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் தான் தற்போது இந்த வீட்டினை வாங்கி இருக்கிறது.
அதர் பூனவல்லாவின் குடும்பத்தினர் லண்டனுக்கு செல்லும்போது தங்குவதற்காக இந்த வீடு வாங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் 2023 ஆம் ஆண்டில் லண்டனில் விற்பனையான மிக அதிக விலை கொண்ட வீடு இதுதான் என சொல்லப்படுகிறது.
இந்த குடியிருப்பானது 1920 களில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு இந்த குடியிருப்பினை போலந்து நாட்டை சேர்ந்த பணக்காரர் ஒருவர் வைத்திருந்தாராம். அவரிடம் இருந்து 1444 கோடி கொடுத்து அதர் பூனவல்லாவின் நிறுவனம் வாங்கி உள்ளது.
லண்டனில் இதுவரை விற்பனையான இரண்டாவது அதிக விலை கொண்ட குடியிருப்பாக இது சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவின் முன்னாள் இளவரசரான சுல்தான் பின் அப்துல்லாஸிக்ஸ் லண்டனில் 19000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு வீட்டினை வாங்கினார்.
சைரஸ் பூனவல்லாவின் மகன் தான் அதர் பூனவல்லா, இவர் 2011ஆம் ஆண்டில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தான் கொரோனா காலத்தில் தடுப்பூசிகளை தயாரித்து வழங்கியது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications