இந்திய ரீடைல் சந்தையில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ரீடைல், AJIO, ஜியோமார்ட் என அடுத்தடுத்த வர்த்தக அறிமுகம் மற்றும் விரிவாக்கத்தின் காரணமாகப் பல லட்ச வாடிக்கையாளர்களை மிகவும் குறைந்த காலகட்டத்தில் பெற்று மிகப்பெரிய வர்த்தக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஈகாமர்ஸ் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திற்குப் போட்டியாக டாடா குழுமம் புதிதாக இறங்கியுள்ள நிலையில், ஏற்கனவே ரீடைல் வர்த்தகத் துறையில் இருக்கும் ஆதித்யா பிர்லா குழுமம் தனது வர்த்தகத்தை வலிமைப்படுத்தும் விதமாக, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆடம்பர ஆடை தயாரிப்பு மற்றும் பேஷன் நிறுவனமான sabyasachi நிறுவனத்தின் பங்குகளை ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடைல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
sabyasachi பங்குகள்
இந்தியாவில் பல முன்னணி நடிகை, நடிகர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்களுக்கு ஆடை வடிவமைக்கும் ஆடம்பர டிசைனர் நிறுவனமான sabyasachi-யின் 51 சதவீத பங்குகளை ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடைல் நிறுவனம் சுமார் 398 கோடி ரூபாய்க்குக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.
பணப் பரிமாற்றம்
இந்த 51 சதவீத பங்குகளையும் ஆதித்யா பிர்லா குழுமம் பங்குகளாக அல்லாமல் பணப் பரிமாற்றம் செய்து வாங்க முடிவு செய்துள்ள நிலையில், அடுத்த 30 முதல் 45 நாட்களுக்குள் இந்த வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு வர்த்தகம்
ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடைல் நிறுவனம் கைப்பற்றும் sabyasachi நிறுவனம் ஆடை மட்டும் அல்லாமல் நகைகள் மற்றும் இதர பேஷன் பொருட்களையும் வடிவமைத்து விற்பனை செய்கிறது. மேலும் இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் மட்டும் அல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் தனது தயாரிப்பு மற்றும் வடிவமைப்புகளை விற்பனை செய்கிறது.
ஆடம்பர பேஷன் சந்தை
sabyasachi நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளைக் கைப்பற்றுவதன் மூலம் ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடைல் நிறுவனத்தின் பாரம்பரிய ஆடை விற்பனை பிரிவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் இந்தியாவின் ஆடம்பர பேஷன் சந்தையில் பெருமளவிலான வர்த்தகத்தை அடைய முடியும்.
வர்த்தகம் தொடர் வளர்ச்சி
sabyasachi நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் காரணத்தால் இந்நிறுவனத்தின் வருமானம் ஒவ்வொரு நிதியாண்டிலும் மேம்பட்டு வருகிறது. இதன் படி 2018ஆம் நிதியாண்டில் 209 கோடி ரூபாய், 2019ஆம் நிதியாண்டில் 253 கோடி ரூபாய், 2020ஆம் நிதியாண்டில் 274 கோடி ரூபாய் அளவில் வருமானத்தைப் பெற்றுள்ளது.
அம்பானி Vs பிர்லா
ரிலையன்ஸ் ரீடைல் 20க்கும் மேற்பட்ட ஆடம்பர பேஷன் மற்றும் ஆடை நிறுவனத்துடன் கூட்டணி வைத்து இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் நிலையில் பிர்லா குழுமமும் sabyasachi மூலம் ஆடம்பர பிரிவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications