கிரிக்கெட் வீரர் விராட் கோலி விளையாட்டு உலகை தாண்டி பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வதிலும் கவனம் பெற்றுள்ளார். அவரே சொந்தமாக சில நிறுவனங்களை நடத்தினாலும் , குறிப்பிட்ட சில நிறுவனங்களில் கணிசமான முதலீடு செய்து பங்குகளை வைத்திருக்கிறார்.
அந்த வகையில் விராட் கோலி முதலீடு செய்துள்ள நிறுவனம் தான் Wrogn. இந்த நிறுவனம் ஆண்களுக்கு ஆடை, காலணிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது ஆதித்யா பிர்லா குழுமம் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறது. ஆதித்யா பிர்லா என்பது இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமம் ஆகும்.

இவர்கள் தற்போது ஃபேஷன் துறையில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு சொந்தமான ஆதித்யா பிர்லா டிஜிட்டல் பேஷன் லிமிடெட் என்ற நிறுவனம் விராட் கோலி முதலீடு செய்திருக்கும் Wrogn பிராண்டில் 75 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் Wrogn நிறுவனத்தின் ஆதித்யா பிர்லா குழுமம் தங்களுடைய பங்குகளின் மதிப்பை 17.10 சதவீதத்திலிருந்து 32.84 சதவீதம் என அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் தான் ஆதித்யா பிர்லா குழுமம், தங்களுக்கு சொந்தமான ஈகாமர்ஸ் தளமான TMRW மூலம் Wrogn நிறுவனத்தில் 125 கோடி முதலீடு செய்தது. இதன் மூலம் ஆதித்யா பிர்லா குழுமம் தங்களுடைய ஃபேஷன் ரீடெய்ல் துறையை வலுப்படுத்தி வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு அஞ்சனா மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோரால் தொடங்கப்பட்டது தான் Wrogn நிறுவனம். இது 18 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்களை இலக்காகக் கொண்டு ஆடை மற்றும் காலணிகள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்கிறது. நவீன இளைஞர்கள் விரும்பும் வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் ஆடைகள் விற்கப்படுவதால் இளைஞர்களுக்கு பிடித்தமான பிராண்டாகவும் மாறியுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளிலும் இந்த பிராண்டின் ஆடைகள் விற்கப்படுகின்றன.
2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் Wrogn நிறுவனத்தின் வருமானம் 344 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே 2024 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 29 சதவீதம் சரிவடைந்து 243 கோடி என குறைந்துவிட்டது. இருந்தாலும் இதன் வளர்ச்சி அதிகரிக்கும் என நம்பி ஆதித்யா பிர்லா குழுமம் முதலீடு செய்துள்ளது.
தற்போது ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு சொந்தமான TMRW ஈ காமர்ஸ் தளம், The Indian Garage Co, Bewakoof, Nobero, Nauti Nati, Urbano, JuneBerry ,Veirdo ஆகிய பிராண்டுகளின் ஆடைகளை விற்பனை செய்கிறது.


Click it and Unblock the Notifications