கடந்த மாதம் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விபத்து 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மறக்க முடியாத ஒரு சோக நிகழ்வாக மாறி இருக்கிறது.
ஜூன் மாதம் 12ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. அருகில் இருந்த பீஜே மருத்துவக் கல்லூரி கட்டடத்தின் மீது மோதி விமானம் விபத்தை சந்தித்தது . இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒருவரை தவிர அனைவருமே உயிரிழந்தனர். உலகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த விபத்து.

விபத்து தொடர்பாக விமானத்தின் கருப்பு பெட்டி கைப்பற்றப்பட்டு எதனால் இந்த விபத்து நேர்ந்தது என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. என்ஜின்களுக்கு எரிபொருள் கொண்டு செல்வதற்கான சுவிட்ச் நடுவானில் அணைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த விமான விபத்து ஏர் இந்தியாவுக்கு மேலும் ஒரு புதிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
விமான விபத்து பயணிகளான நம்மிடம் எப்படி அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறதோ அதை விட விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் மனதில் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக விமானிகள் மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் விமானிகள் உடல்நிலை சரியில்லை என கூறி விடுப்பு எடுப்பது அதிகமாகி இருக்கிறது.

விமான போக்குவரத்து துறை அமைச்சரான ராமமோகன் நாயுடு மக்களவையில் அளித்துள்ள பதிலில் ஏர் இந்தியா விமான விபத்து நிகழ்ந்த ஜூன் 12ஆம் தேதிக்கு பின்னர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானிகள் விடுப்பு எடுப்பது உயர்ந்துள்ளது என கூறியுள்ளார். சிக் லீவ் எனப்படும் உடல்நிலை சரியில்லை என கூறி விடுப்பு எடுக்கும் போக்கு அதிகமாகி இருப்பதாக கூறுகிறார்.
விபத்து நிகழ்ந்த தேதிக்கு பின்னர் நான்கு நாட்களில் ஏர் இந்தியா நிறுவனத்தில் மூத்த விமானிகள் 61 பேரும் பிளைட் ஆபிஸர்களாக இருக்கக்கூடிய 51 பேரும் விடுப்பு எடுத்துள்ளனர் என தெரிவித்து இருக்கிறார் . இந்த விமான விபத்து விமானிகளிடம் பெரிய பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். விமானிகள் இதில் இருந்து மீண்டு வர ஏதுவாக அவர்களுக்கு சிறப்பு திட்டங்களை கொண்டு வர ஏர் இந்தியாவிற்கு அரசு அறிவுறுத்தி இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் பிப்ரவரி 2023 இல் வெளியிட்ட சுற்றறிக்கையின் படி விமானிகள் விமான பணியாளர்களின் மனநலனை சரியாக பராமரிப்பது கட்டாயம் என விமான சேவை நிறுவனங்களுக்கு கூறி இருக்கிறது. மனநலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை கண்டறிந்து அவற்றை மேலாண்மை செய்வது தொடர்பாக பயிற்சி வழங்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் மனநலன் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.
written by : Devika Manivannan


Click it and Unblock the Notifications