பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு எதிராக இந்திய அரசு தொடுத்த வரி நிலுவை வழக்கு 6 வருடங்களாக நடந்துவந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை நடுவர் தீர்ப்பாயம் கெய்ர்ன் எனர்ஜி-க்குச் சாதகமாக வழங்கியது, இதுமட்டும் அல்லாமல் இந்திய அரசு இந்தப் பிரிட்டன் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வட்டியுடன் சேர்த்து சுமார் 1.2 பில்லியன் டாலர் தொகை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
கெய்ர்ன் எனர்ஜி நடுவர் தீர்ப்பாயம் அறிவித்த 1.2 பில்லியன் டாலர் தொகையை விரைவாகப் பெற வேண்டும் என்பதற்காக இந்திய அரசுக்குச் சொந்தமான சொத்துக்களைக் கைப்பற்ற முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளது.
கெய்ர்ன் எனர்ஜி நஷ்ட ஈடு
கெய்ர்ன் எனர்ஜி தனது நஷ்ட ஈடு தொகையை எப்படியாவது விரைவாகப் பெற்றுவிட வேண்டும் என்ற திட்டத்துடன் இந்திய அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் இந்தியப் பொதுத்துறை வங்கிகள் கணக்குகள் வைத்திருக்கும் நாடுகளில் நடுவர் தீர்ப்பாயம் தீர்ப்பை மையமாக வைத்துச் சொத்துக்களைக் கைப்பற்ற அனுமதி பெற அமெரிக்கா முதல் சிங்கப்பூர் வரையில் இருக்கும் நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்து வருகிறது.
கெய்ர்ன் எனர்ஜி பெற்ற ஒப்புதல்
கெய்ர்ன் எனர்ஜி ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தொடுத்த வழக்குகளுக்கு அனுமதி வாங்கியுள்ளது. இதேவேளையில் இந்திய அரசு சார்பில் நடுவர் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
முதல் இலக்கு ஏர் இந்தியா
கெய்ர்ன் எனர்ஜி சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க நீதிமன்றத்தில் தனது கிடைக்கவேண்டிய 1.2 பில்லியன் டாலர் தொகைக்காக இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் சொத்துக்களைக் கைப்பற்ற உள்ளதாக அறிவித்தது.
70 பில்லியன் டாலர் சொத்துக்கள்
இதுமட்டும் அல்லாமல் கெய்ர்ன் எனர்ஜி சுமார் 70 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்களை உலகின் பல நாடுகளில் இருந்து கண்டறிந்துள்ளது. இதனால் கெய்ர்ன் எனர்ஜி எந்த நாட்டில் இருக்கும் சொத்துக்களைக் கைப்பற்றும் என்பதைப் பற்றி தெரியாத பதற்றமான சூழ்நிலையில் உள்ளது.
இந்தியப் பொதுத்துறை வங்கிக் கணக்குகள்
கெய்ர்ன் எனர்ஜிக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்த வேளையில் மோடி தலைமையிலான மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பாக இந்திய பொதுத்துறை வங்கிகளை வெளிநாட்டுக் கணக்குகளில் வைத்திருக்கும் பணத்தை முழுமையாக வித்டிரா செய்ய அறிவுறுத்தியது.
மொத்த நஷ்டஈடு தொகை
கெய்ர்ன் எனர்ஜிக்கு நடுவர் தீர்ப்பாயம் அளித்த உத்தரவின் படி நஷ்டஈடு தொகை, வட்டி, அபராதம் ஆகியவற்றைச் சேர்த்து மொத்தம் இந்திய அரசு சுமார் 1.72 பில்லியன் டாலர் அளவிலான தொகையை அளிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications