இந்திய டெலிகாம் துறை மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது, எப்படி 2016ல் ஜியோ 4ஜி சேவையை அறிமுகம் செய்து பெரும் மாற்றத்தை டெலிகாம் சேவையில் அறிமுகம் செய்து புரட்சியை ஏற்படுத்தியதோ இதேபோல் தற்போது பிராண்ட்பேன்ட் சேவையில் பெரும் மாற்றம் நடக்கப்போகிறது.
செயற்கைக்கோள் வாயிலாக பிராண்ட்பேன்ட் சேவையை அளிக்கும் எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் பல ஆண்டு போராட்டத்திற்குப் பின்பு இந்தியாவுக்கு வர உள்ளது. இதற்காக நேற்று ஏர்டெல் ஸ்பேஸ்எக்ஸ் உடன் ஒப்பந்தம் செய்த நிலையில், இன்று ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அடிப்படையிலான இண்டர்நெட் சேவைகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கான ஸ்பெக்ட்ரம் இலவசமாக கொடுக்க கூடாது, அதை ஏல முறையில் தான் வழங்க வேண்டும் என்று உறுதியாக நின்றது ஏர்டெல் மற்றும் ஜியோ. ஆனால் தற்போது இவ்விரு நிறுவனங்களும் ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவுக்கு கொண்டு வர ரூட்டு போட்டுக்கொடுக்கிறது.
இதையும் தாண்டி எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் சேவைக்கு போட்டியாக ஏர்டெல் தனது சொந்த முதலீட்டில் ஒன்வெப் என்ற முக்கிய கூட்டணியை உருவாக்கியது, இதேபோல் ஜியோவும் ஐரோப்பிய நிறுவனத்துடன் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியது. ஆனால் இவ்விரு கூட்டணியும் இதுநாள் வரையில் சேவையை அறிமுகம் செய்யவில்லை.
இந்த நிலையில் தான் எலான் மஸ்க் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இப்போது இந்தியாவில் தனது நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்தும் விண்வெளி துறையில் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து பணியாற்றுவது குறித்தும் பேசினார்.
எலான் மஸ்க் தற்போது டிரம்ப் உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் காரணத்தால் பல விஷயங்களில் தளர்வு அளிக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது ஸ்டார்லிங்க் சேவைக்கு ஸ்பெக்ட்ரம் இலவசமாக ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது அல்லது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்திடம் இருக்கும் ஸ்பெக்ட்ரம் கொண்டு ஸ்டார்லிங்க் சேவை இயங்குமா என்பது முழுமையாக தெரியவில்லை.
ஸ்டார்லிங்க் தனது செயற்கைகோள் அடிப்படையிலான பிராண்ட்பேன்டே் சேவையை இந்தியாவில் அளிப்பதற்காக ஜியோ மற்றும் ஏர்டெல் உடன் ஒப்பந்தம் செய்தாலும், இந்திய அரசு மற்றும் டிராய் அமைப்பிடம் இருந்து சில முக்கியமான ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெற வேண்டியது அவசியமானதாக உள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி இந்த ஒப்பந்தத்தின்படி, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் வைத்திருக்கும் தனது பிரம்மாண்ட ரீடைல் நெட்வொர்க் (ஆப்லைன் & ஆன்லைன்) வாயிலாக ஸ்டார்லிங்க் சேவையை பயன்படுத்துவதற்கான உபகரணங்களை விற்க உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இன்ஸ்டாலேஷன் சேவைகளையும் இவ்விரு நிறுவனங்கள் வழங்க உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்கக் கருத்து வேறுபாடு நிலவிய காலகட்டத்திற்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. இதேபோல் இந்த கூட்டணி மூலம் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கான வருமான பகிர்வு எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications