இந்தியாவின் முன்னணி வாடகை வாகன தளமான ஓலாவில் தலைமை பதவிகளில் இருப்பவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். ஓலா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக 7 மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற கார்த்திக் குப்தா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு தான் ஓலாவின் தலைமை செயல் அதிகாரியான ஹிமந்த் பக்ஸி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து நிறுவனத்தை விட்டு வெளியேறினார். தற்போது தலைமை நிதி அதிகாரியும் பதவி விலகியுள்ளார்.

கார்த்திக் குப்தா பதவி விலகல் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் ஓலா, தங்கள் நிறுவனத்தின் மறுகட்டமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாகவே கார்த்திக் குப்தா பதவி விலகி இருக்கிறார் என தெரிவித்துள்ளது.
ஓலா மொபிலிட்டி நிறுவனத்தின் தற்போதைய மறுகட்டமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தலைமை நிதி அதிகாரி கார்த்திக் குப்தா பதவி விலகியுள்ளார்.செயற்கை நுண்ணறிவு செயல்திறனை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு மறு கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன" என ஓலா செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
நிறுவனத்தின் வளர்ச்சியை மையமாக கொண்டு தற்போது மறுகட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. லிங்குடின் தளத்தில் உள்ள தகவலின் படி கார்த்திக் குப்தா, ஓலாவில் பணிக்கு சேர்வதற்கு முன்பு 17 ஆண்டுகள் பிராக்டர் மற்றும் கேம்பலின் துணை தலைவராகவும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தலைமை நிதி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
7 மாதங்களுக்கு முன்பு ஓலாவில் இணைந்த கார்த்திக் குப்தா , நிதி மூலோபாயம் ,வளர்ச்சி, வரி மற்றும் முதலீட்டாளர்களுடன் தகவல் தொடர்பு உள்ளிட்ட பிரிவுகளுக்கு தலைமை பொறுப்பு வகித்தார்.
ஓலா நிறுவனம் வாடகை வாகன சேவை மட்டுமல்லாது மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளது. அண்மையில் வெளிநாடுகளில் தங்களின் சேவையை நிறுத்த போவதாக ஓலா நிறுவனம் அறிவித்தது. முற்றிலும் இந்தியாவில் தங்களின் கவனம் இருக்கும் என தெரிவித்தது.
அதே போல மின்சார வாகன உற்பத்தியிலும் தீவிர கவனம் செலுத்த போவதாகவும் தங்கள் வாடகை வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கான பணிகளை முன்னெடுக்க போவதாகவும் அறிவித்தது. இதனிடையே ஓலா நிறுவனம் ஊழியர்களையும் பணி நீக்கம் செய்து வருகிறது.
இது தொடர்பாக ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ள பவிஷ் அகர்வால், நிறுவனத்தின் மறுகட்டமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக பணி நீக்கங்கள் இருக்கும் என கூறியுள்ளார். இதன் மூலம் 10% ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.
இதனிடையே ஓலா ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பவிஷ் அகர்வாலின் சகோதரர் அங்குஷ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications