சென்னையில் கடந்த 14 மற்றும் 15ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. அப்போது திடீரென ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரையில் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தான் இந்த விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அங்கே குடியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாமல் தவிக்கின்றனர். வடசென்னை பகுதியில் அமைந்தகரையில் நெல்சன் சேம்பர் அப்பார்ட்மெண்ட் என்ற ஒரு குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 200 பிளாட்டுகள் உள்ளன. இதில் சுமார் 600 பேர் வசிக்கின்றனர்.

கடந்த 15ஆம் தேதி பெய்த கனமழையைத் தொடர்ந்து இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் திடீரென விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அங்கே குடியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அச்சத்தில் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினர். காலை திடீரென பயங்கர சத்தம் கேட்டதாகவும் அதனை அடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த போது குடியிருப்பின் ஒரு பகுதி உள்வாங்கி, அடித்தளங்களில் விரிசல் ஏற்பட்டிருந்ததாகவும் குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கும் அருகிலுள்ள கூவம் நதி கால்வாய்க்கும் இடையே ஒரு உயர் அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதுவே தங்களுடைய கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்படுவதற்கு காரணம் என அங்கே குடியிருப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தொடர் மழை காரணமாக கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியில் இருந்த ஒரு சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. இதனை அடுத்து தான் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த கட்டிடத்திற்கான கட்டுமான பணி தொடங்கியது முதலே தங்களுடைய குடியிருப்பில் இருக்கும் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தாங்கள் அச்சப்பட்டதை போலவே தற்போது நிகழ்ந்துவிட்டது என்றும் இங்கே குடியிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் கூவம் நதி கால்வாய் அமைப்பிற்கு அருகிலேயே ஆபத்தான பகுதியில் இந்த உயரடுக்கு கட்டிடம் கட்டப்படுவதாக புகார் கூறுகின்றனர். இதனிடையே அந்த கட்டுமான நிறுவனம் பாதிக்கப்பட்ட குடியிருப்பில் சேதங்களை சீர்ப்படுத்தி தருவதாக தெரிவித்துள்ளது .
இருந்தாலும் இந்த உயர் அடுக்கு கட்டிடத்தால் எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய குடியிருப்புகளுக்கு ஆபத்துதான் என கூறும் இந்த குடியிருப்புவாசிகள், ஐஐடி கல்வி நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்களை வரவழைத்து இங்கே ஆய்வு நடத்த வேண்டும் என்கின்றனர்.
இந்த உயர் அடுக்கு கட்டிடத்தினால் தங்களுடைய குடியிருப்புகளுக்கு ஆபத்து இருக்கிறதா என்பதை நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்து பின்னர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications