மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த வாரம் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகி இருந்தாலும் திருமணத்திற்காக அம்பானி குடும்பம் செய்த செலவுகள் குறித்து தான் இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
இந்த தலைமுறையில் இளைய மகன் என்பதால் அம்பானி குடும்பம் ஆனந்தின் திருமணத்தை வெகு விமரிசையாகவே நடத்தியது. மும்பை ஜியோ செண்டரில் மூன்று நாட்களுக்கு திருமண நிகழ்ச்சிகள் களைகட்டின. அதற்கு முன்பு இரண்டு முறை திருமணத்துக்கு முந்தைய பார்ட்டி நடைபெற்றது. உலகம் முழுவதும், இருந்து பிரபலங்கள் வருகை தந்தனர். புகழ்பெற்ற இசை கலைஞர்களின் கச்சேரியும் நடத்தப்பட்டது.

உலகின் பெரும் பணக்காரர்கள் பலரும் அணிவகுத்து வந்து ஆனந்த் அம்பானியை வாழ்த்தினர். பில் கேட்ஸ், மார்க் ஸக்கர்பெர்க் , இந்திய திரையுலக பிரபலங்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியினர் இந்த திருமணத்திற்காக 5,000 கோடி ரூபாயை செலவு செய்ததாக தெரிகிறது. ஆனால் இது அம்பானியின் மொத்த சொத்து விகிதத்தில் 0.5% சதவிகிதம் தான். 5000 கோடி ரூபாய் எல்லாம் அம்பானிக்கு ஒரு பொருட்டே இல்லை என கூறுவதை போல ஒரு வாரத்திலேயே அவர் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது.
இன்றைய தேதி நிலவரப்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 121.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சம் கோடி ஆகும். தன்னுடைய மகனின் திருமணத்திற்காக 5,000 கோடியை அவர் செலவு செய்திருந்தாலும், ஒரு வாரத்திலேயே அதை விட பல மடங்கு வருமானத்தை அவர் பெற்றிருக்கிறார். அண்மையில் வெளியான தகவலின் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் சேர்ந்துள்ளதாம்.
ஜூலை 5-ஆம் தேதி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 118 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களில் அது 121 பில்லியன் டாலர்கள் என உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாயை அவர் ஈட்டி உள்ளார். 2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் கூடுதலாக 1.88 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications