இந்தியாவில் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் மதரீதியான பாகுபாடுகள் காட்டப்படுவதாகவும், இந்து பெண்கள் இலக்கு வைக்கப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும் வெளியாகி வரக்கூடிய தகவல்கள் நாடு முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த சூழலில் டாடா குழுமத்திற்கு உட்பட்ட டிசிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நாசிக் அலுவலகத்தில் ஆண் ஊழியர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு இந்து பெண் ஊழியர்களை இலக்கு வைத்து மூளை சலவை செய்து பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கட்டாய மதமாற்றம் செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் புகார் கொடுத்தும் ஹெச்ஆர் மேலாளராக இருந்த இஸ்லாமிய பெண் அதிகாரி அதனை விசாரிக்காமல் இருந்ததால் அவருக்கும் அதில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதே வேளையில் வெளிநாட்டினரோடு இந்த குழுவினருக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட நாசிக் அலுவலகம் மூடப்பட்டிருக்கிறது. ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் முன்னணி ஐடி நிறுவனத்தில் மதமாற்றம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என பல்வேறு கேள்விகளை முன்வைக்கப்படக்கூடிய சூழலில் தான் இந்தியாவின் புகழ்பெற்ற கண் கண்ணாடி விற்பனை நிறுவனமான லென்ஸ்கார்ட்டில் ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் பாகுபாடு இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.
ஊழியர்களுக்கான வழிகாட்டியில் ஹிஜாப் அணிந்து கொள்ளலாம் ஆனால் பொட்டு, பிந்தி, திலகம் வைக்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளதாம். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஆவணம் வெளியானது. அதில் லென்ஸ்கார்ட் நிறுவனம் 2026 பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று வெளியிட்ட ஊழியர்களுக்கான வழிகாட்டுதலில் பொட்டு உள்ளிட்டவை வைக்கக்கூடாது, ஆனால் ஹிஜாப் மற்றும் டர்பன் அணிந்து கொள்ளலாம் என கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் எங்கும் பரவி இது கடும் கண்டனங்களை ஏற்படுத்தியது. இந்த சூழலில் லென்ஸ்கார்ட் நிறுவனர் பியூஸ் பன்சால் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இதற்கு விரிவான விளக்கம் தந்திருக்கிறார்.
இப்படி எந்த ஒரு வழிகாட்டுதலும் தற்போது நடைமுறையில் இல்லை என கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த ஊழியர்கள் அதனை வெளிப்படுத்துவதற்கு எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லை, பொட்டு வைக்க கூடாது என எங்களுடைய வழிகாட்டுதல்களில் நாங்கள் குறிப்பிடவே இல்லை என கூறியிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் எங்களுடைய வழிகாட்டுதல்களை நாங்கள் அப்டேட் செய்து வருகிறோம். ஆனால் இதில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல பொட்டு வைக்க அனுமதி இல்லை என கூறப்படுவதில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.
எங்களுடைய நிறுவனத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலை செய்கிறார்கள் அவர்கள் அனைவருமே அவர்களுடைய நம்பிக்கையும் கலாச்சாரத்தையும் பெருமையுடன் பிரதிபலிக்கிறார்கள் இதுதான் என லென்ஸ்கார்ட் என கூறியிருக்கிறார். இந்தியர்களால் இந்தியர்களுக்காக தொடங்கப்பட்ட நிறுவனம் தான் லென்ஸ்ல்கார்ட் என கூறியிருக்கும் அவர் ஒவ்வொருவரும் அவர்களுடைய மத ரீதியான அடையாளங்களையும் வெளிப்படுத்துவதற்கு உரிமை கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் இது ஒரு பழைய ஆவணம் என குறிப்பிட்டு இருக்கும் அவர், இதனை நாங்கள் படித்த உடனே நீக்கிவிட்டோம் தற்போது இப்படி ஒரு பாலிசி நிறுவனத்தில் இல்லை என தெரிவித்திருக்கிறார். இது என்னுடைய தவறுதான் முன்கூட்டியே இதனை நான் கவனித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது ஒரு காலாவதியான இண்டர்னல் ட்ரெய்னிங் டாக்குமெண்ட் என்றும் இது ஹெச்ஆர் பாலிசி கிடையாது என்றும் தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் இப்படி ஒரு பாலிசி இல்லை என்றால் அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டியது தானே என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications