இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமம் சில நாட்களுக்கு முன்பு தனது டிசிஎஸ் நிறுவனத்தில் விதிமுறைகளை மீறியதற்காகவும், முறைகேடான விஷயங்களை செய்ததற்காகவும் 6 ஊழியர்களை பணிநீக்கம் செய்தும், 6 வேலைவாய்ப்பு நிறுவனங்களை தடையும் செய்தது.
இந்த சம்பவத்தின் அதிர்வுகள் அடங்குவதற்குள் அடுத்த அதிரடி அறிவிப்பு டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் அவர்களிடம் இருந்து வந்துள்ளது. டாடா குழுமத்தின் முதுகெலும்பாக இருக்கும் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் நெறிமுறைகளை மீறிய காரணத்திற்காக சுமார் 35 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் கூறுகையில் டாடா ஸ்டீல் நிர்வாகம் சுமார் 38 பேர் மீது நடவடிக்கை எடுத்து பணியில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதில் 35 பேர் நிறுவன நெறிமுறைகளை மீறிய பிரச்சினைகள் காரணமாகவும், ஏற்றுக்கொள்ள முடியாத தவறுகளை செய்த காரணத்திற்காகவும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
மீதமுள்ள மூன்று பேர் தவறான பாலியல் நடத்தை காரணமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு டாடா ஸ்டீல் நிறுவன பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக டாடா சன்ஸ் தலைவரும், டாடா ஸ்டீல் சேர்மன் ஆன என்.சந்திரசேகரன் கூறியுள்ளார்.
பல்வேறு whistleblower புகார்கள் அடிப்படையில் ஆய்வுகளையும், விசாரணைகளையும் மேற்கொண்டு பாலியல் புகார்கள் முதல் நிறுவன நெறிமுறை மீறல்கள் வரையில் தவறுகள் நடந்ததை உறுதி செய்த பின்பு 38 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது பொதுவாக நடப்பது என்றாலும் அடுத்தடுத்து பணிநீக்கம் என்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய சந்திரசேகரன் நிறுவனத்தில் அனைத்து ஊழியர்களுக்கு தங்களுடைய குறைகளை பதிவிட உரிமை உள்ளது. இதன் படி டாடா ஸ்டீல் நிர்வாகம் கடந்த நிதியாண்டு மட்டும் 875 புகார்களை பெற்றுள்ளது, இதில் 158 புகார்கள் Whistleblowers கொடுத்த புகார், 48 புகார் பாதுகாப்பு தொடர்பானது, 669 புகார் HR மற்றும் இதர பிரச்சனைகளை சார்ந்தது என சந்திரசேகரன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications