வரும் 31 ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால் பட்டய கணக்காளர்களும், ஆடிட்டர்களும், ஊதியம் பெறக்கூடிய தனி நபர்களும் வருமான வரி தாக்கலில் தீவிரமாக இருக்கின்றனர். இதனிடையே அண்மையில் வருமான வரி போர்ட்டலில் வரி தாக்கல் செய்யும் முறை புதுப்பிக்கப்பட்டதை எடுத்து வரி செலுத்துவோர் பல சிக்கல்களை சந்திப்பதாக கூறுகின்றனர்.
அதாவது குறுகிய கால மூலதன ஆதாயங்களை பதிவு செய்திருந்தால் புதிய வரி நடைமுறையின் கீழ் 25,000 ரூபாய் வரை கிடைக்க கூடிய தள்ளுபடியை விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாம் . பொதுவாக குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் வரிகளை குறைக்க உதவும் வகையில் வருமான வரியில் வரி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது அவர்கள் தங்கள் வரி வருமானத்தை தாக்கல் செய்வதை உறுதி செய்கிறது.

மத்திய பட்ஜெட் 2023இல் கொண்டுவரப்பட்ட மாற்றத்தின் படி புதிய வரி நடைமுறையை தேர்வு செய்யும் தனி நபர்கள் தங்கள் வரிவிதிப்பு வருமானம் 7 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் 25,000 ரூபாய் வரை வரி தள்ளுபடி பெற அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் தற்போது அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மொத்த வரி விதிப்பு வருமானம் என்றால் என்ன என்பது பற்றிய வேறுபட்ட கருத்து காரணமாக வருமானவரி கணக்கினை தாக்கல் செய்பவர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர்.
இந்த சிக்கலை கண்டறிந்த டேக்ஸ்ஆரம் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் மயங்க் மோகன்கா புதிய வரி நடைமுறையின் கீழ் இந்த விசித்திரமான ஒரு போக்கினை நாங்கள் காண்கிறோம் என்கிறார். அதாவது நிகர வருமானம் 7 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் 15 சதவீத குறுகிய கால மூலதன ஆதாயங்களை பதிவு செய்திருந்தால் 25,000 ரூபாய் தள்ளுபடி பெற முடியவில்லை. ஆனால் ஜூலை மாதம் 5ஆம் தேதிக்கு முன்பு வரை இந்த தள்ளுபடி கிடைத்தது அதன் பிறகு வரி தாக்கல் செய்பவர்களுக்கு தள்ளுபடி கிடைக்கவில்லை என கூறுகிறார்.
ஜூலை 5ஆம் தேதி வருமான வரி தளத்தில் அப்டேட் செய்யப்பட்ட நிலையில் இந்த பிரச்சினையை எதிர்கொள்வதாக தெரிவிக்கிறார். பிரிவு 111ஏ -இன் கீழ் ஒருவர் குறுகிய கால மூலதன ஆதாயத்தை பதிவு செய்து இருந்தாலும் மொத்த வருமானம் 7 லட்சத்திற்கும் குறைவாக இருந்தாலும் 25,000 ரூபாய் தள்ளுபடியை கோரலாம். அரசு இதில் எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை, ஆனால் வருமான வரி இணையதளம் ஏன் இதனை ஏற்க வில்லை என்பதில் தான் தற்போது பிரச்சினையாகியுள்ளது.
உதாரணமாக சுரபி என்பவர் 6.5 லட்சம் ரூபாய் சம்பளமாகவும் பிற வருமான மற்றும் குறுகிய கால மூலதன ஆதாயங்கள் மூலம் 3 லட்சம் ரூபாயையும் அந்த ஆண்டில் மொத்த வருமானமாக பெற்று இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். இங்கே அவரது வரி விதிப்பு வருமானம் 7 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது ஆனால் பிரிவு 87 ஏ வின் கீழ் அவருக்கு தள்ளுபடி மறுக்கப்படுகிறது என்கிறார்.
ஏற்கனவே வருமான வரி இணைய தளம் மெதுவாக செயல்படுகிறது, வரி கணக்கு தாக்கல் செய்வதில் தாமதம் ஆகிறது என பல்வேறு சிக்கல்கள் நீடிக்கும் போது இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதால் வருமானவரி கணக்கை தாக்குவது தாக்கல் செய்வது மேலும் மேலும் தாமதமாகிறது என பட்டய கணக்காளர்கள் கூறுகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications