டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இதுவரை இல்லாத செல்வ வளத்தோடு உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற தன்னுடைய சொந்த சாதனையையே முறியடித்து இருக்கிறார். தற்போதைய சூழலில் உலகிலேயே அதிகளவு சொத்து கொண்டிருக்கும் தனிநபர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து எலான் மஸ்கிற்கு சொந்தமான நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. அண்மையில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.
இதில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு பெரிய அளவில் ஆதரவு தந்து பக்கபலமாக இருந்தவர் எலான் மஸ்க். அதற்கு பதிலாக டிரம்ப் தன்னுடைய நிர்வாகத்தில் எலான் மஸ்கிற்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் எலான் மஸ்குக்கு சொந்தமான டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது . நவம்பர் 22ஆம் தேதி நிலவரப்படி ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 350 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி, தேர்தல் முடிவுகள் வெளியாகி தற்போது வரையிலான காலகட்டத்தில் மட்டும் அதாவது இந்த ஒரு மாதத்திற்கு உள்ளேயே டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 40 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
வெள்ளிக்கிழமை அன்று பங்குச்சந்தை முடிவடைந்த போது டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பும் 3.8 சதவீதம் உயர்ந்தது.
இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டு எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 320.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பை எட்டியது. தற்போது இவரின் மொத்த சொத்து மதிப்பு 347.8 பில்லியன் டாலர்கள் என உயர்ந்திருக்கிறது. எலான் மஸ்க் தன்னுடைய பல்வேறு ப்ராஜெக்ட்களுக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் ஒப்புதல் பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுவதால் பல முதலீட்டாளர்களும் டெஸ்லா நிறுவன பங்குகளை போட்டி போட்டு வாங்குகின்றனர்.
இதுவே அவருடைய சொத்து மதிப்பு உயர்வதற்கு காரணமாக இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்த பிறகு மட்டும் இவருடைய சொத்து மதிப்பு 83 பில்லியன் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மனித குல வரலாற்றிலேயே இதுவரை இவ்வளவு பெரிய செல்வ வளத்தை கொண்டவர் யாரும் கிடையாது என்ற பெருமை எலான் மஸ்கிற்கு கிடைத்திருக்கிறது.
தற்போது டொனால்ட் டிரம்பின் வலது கரமாக எலான் மஸ்க் மாறி இருக்கிறார். எனவே டிரம்ப் பதவியேற்ற உடன் எலான் மஸ்கின் சொத்து மதிப்பும் ,நிறுவனங்களின் பங்கு மதிப்பும் இன்னும் உயர வாய்ப்புள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications