சென்னை: இன்றைய நவீன கால வாழ்க்கை முறையில் நாளுக்கு நாள் உயரும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில், தங்கத்திற்கு இணையாக விலை நிலங்களும் உச்சத்தில் இருக்கின்றன. மண்ணில் போடுவதும், பொன்னில் போடுவதும் ஒன்று என்ற பலமொழிக்கு ஏற்ப நிலம் வாங்குவதும் ஒரு பாதுகாப்பான முதலீடாகவே உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒருவர் எவ்வளவு விவசாய நிலத்தை வைத்திருக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சில வருடங்களுக்கு முன்பு விளைச்சலை கண்ட நிலங்கள் இப்போது பல அடுக்கு மாடி குடியிருப்புகளைத் தாங்கி நிற்கின்றன. எவ்வளவு விலை உயர்ந்தாலும் மக்கள் நிலங்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். எதிர்வரும் காலத்தில் விவசாயம் செய்யும் நோக்கத்திலும் விளை நிலங்களை அதிக விலை கொடுத்து மக்கள் வாங்கி வருகின்றனர். இதற்கிடையில் ஒரு நபர் எவ்வளவு நிலம் வரை வைத்திருக்கலாம் என்று சமீபத்திய அறிவிப்பு ஒன்று தெளிவாக விளக்குகிறது.

இந்தியாவில் மாநிலம் வாரியாக ஒருவர் எவ்வளவு விவசாயம் நிலம் வைத்திருக்க வேண்டும் என்பது பெரும்பான்மையான மக்களுக்கு தெரிந்திருக்க முடியாது. கணக்கு வழக்கின்றி நிலங்களை கையகப்படுத்தி தனது வசம் வைத்திருக்கும் பலருக்கு மத்தியில் சொந்தமாக வசிக்க ஓர் இடம் கூட இன்றி பல ஆயிரம் பேர் தவித்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நபர் எவ்வளவு விவசாயம் நிலம் வரை வைத்திருக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே ஒரு நிலத்தில் விவசாயம் செய்பவர்கள் மட்டுமே ஒரு விளைநிலத்தை வாங்க முடியும். அதிகபட்சமாக ஒருவர் மகாராஷ்டிராவில் 54 ஏக்கர் நிலம் வரை வாங்க முடியும்.
கேரளா: இம்மாநிலத்தில் நிலச் சீர்திருத்தச் சட்டம் 1963 இன் படி திருமணம் ஆகாத ஒரு நபர் 7.5 ஏக்கர் நிலம் வரையில் வைத்திருக்கலாம். 2 முதல் 3 பேர் உள்ள ஒரு குடும்பத்தினர் 15 ஏக்கர் வரை விவசாய நிலத்தை வாங்கலாம். 5 பேர் கொண்ட கூட்டு குடும்பமாக வாழும் ஒரு குடும்பத்தினர் 20 ஏக்கர் வரையில் விவசாய நிலத்தை வாங்க முடியும்.
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் ஒரு நபர் 54 ஏக்கர் வரையில் விவசாய நிலத்தை வாங்க முடியும். இங்கு ஆண்டுக்கு 25 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உடையவர்களே நிலத்தை வாங்க முடியும். மகாராஷ்டிரா மாநிலத்தைப் போல இங்குள்ள விவசாயிகள் மட்டுமே விளைநிலத்தை வாங்க முடியும்.
குஜராத்: குஜராத் மாநிலத்தை பொருத்தவரையில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு விவசாயியும் இங்கு விவசாய நிலத்தினை வாங்க முடியும்.
பீகார்: பீகார் மாநில நில ஆவணங்களின்படி, ஒரு நபர் விவசாயம் செய்யக்கூடிய அல்லது விவசாயம் செய்ய இயலாத நிலம் உள்பட சுமார் 15 ஏக்கர் நிலம் வரை வாங்கிக் கொள்ளலாம்.
இமாச்சலப் பிரதேசம்: இந்த மாநிலத்தில் ஒரு நபர் அதிகபட்சம் 32 ஏக்கர் அல்லது 120 பிகாஸ் அளவுள்ள நிலம் வரை வாங்கலாம்.
மேற்கு வங்கம்: மேற்குவங்க மாநில நில சீர்திருத்த சட்டத்தின் கீழ் இங்குள்ள ஒரு தனி நபர் 24.5 ஏக்கர் வரை நிலம் வாங்கலாம்.
உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலத்தில் ஒருவர் அதிகபட்சம் 12.5 ஏக்கர் வரை விளைநிலத்தை வாங்க முடியும்.
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு சட்டம் 1961இல் இயற்றப்பட்டது. 1970 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர், 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் 15 ஏக்கர் நிலம் வரை வைத்திருக்கலாம். அதற்கு மேல் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஐந்து ஏக்கர் கணக்கில் வைத்துக் கொள்ளப்படும். ஒரு வீட்டின் மருமகளுக்கு சீதன சொத்தாக 10 ஏக்கர் வரை வைத்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் சேர்த்து ஒரு குடும்பத்திற்கு 30 ஏக்கர் நிலம் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications