நம் நாட்டில் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு ஐடி வேலையில் அதிகப் பிரியம் உண்டு. ஆனால் சமீபத்திய காலமாக சூழல் அதற்கு ஏதுவாக இல்லை. நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக ஆரக்கிள், மெட்டா எனப் பல நிறுவனங்கள் சமீபத்தில் தங்கள் ஊழியர்களைக் குறைத்தது.
மேகம் எடுக்கும் AI தொழில்நுட்பத்தால் ஐடி ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் பயந்து கொண்டு பணிக்கு சென்று திரும்புகின்றனர். இந்நிலையில் அடுத்த ஷாக்கிங் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்குள் நிறுவனத்தில் எவ்வளவு பணியாளர்கள் இருக்கிறார்களோ? அதற்கு இணையான எண்ணிக்கையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஏஜெண்டுகளை பயன்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. இந்தச் செய்தியை டிசிஎஸ்-இன் தலைவர் சந்திரசேகரன், நிறுவனத்தின் 31-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.
AI ஏஜென்ட் என்பது ஒரு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் அவ்வளவுதான். மனிதர்கள் செய்யும் வேலைகளைப் போலவே இந்த AI ஏஜெண்டுகளும் வேலை செய்யும். இனிவரும் காலத்தில் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள், AI ஏஜெண்டுகளுடன் சேர்ந்து பணியாற்றுவார்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இனி வரும் ஆண்டுகளில் டிசிஎஸ் நிறுவனம் குறைந்த அளவிலேயே ஊழியர்களை பணியமர்த்தும் என்றும் சந்திரசேகரன் முதன்முறையாக ஒப்புக்கொண்டார்.

டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது சில பணிகளை ஊழியர்கள் செய்து வருகின்றனர் அது ஏஜெண்டுகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் ஏற்கனவே பணியமர்த்தப்பட்டதை போல் இந்த ஆண்டு ரெக்ரூட்மெண்ட் இருக்காது. 2028 முதல் 2030-ஆம் ஆண்டுக்குள் நிறுவனத்தின் மொத்த வருவாய் AI மூலமாக தான் கிடைக்கும். நிறுவனங்களும் அதற்கு ஏற்ப தங்கள் செயல்பாடுகளை மாற்றியமைத்து வருகிறது.
AI மூலம் டிசிஎஸ் நிறுவனத்திற்கு 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 1.5 பில்லியன் டாலரும், மூன்றாம் காலாண்டில் 1.8 பில்லியன் டாலரும், நான்காம் காலாண்டில் 2.3 பில்லியன் டாலரும் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை 22 சதவீதம் வரை வருமானம் அதிகரித்துள்ளது. இனிவரும் காலங்களில் 100% வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றும் சந்திரசேகரன் கூறியிருந்தார்.
IT துறையைப் பொறுத்தவரையில் பணியாளர் சேர்க்கையில் மந்த நிலையே காணப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் ஐடி துறையில் மொத்தம் 135,000 பேர் சேர்க்கப்பட உள்ளனர். ஆனால் 2026-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 2.3 சதவீதம் குறைவு. 2027-ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் நிறவனம் 25,000 பிரஷர்களை பணியமர்த்த இருக்கிறது. இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த மாதங்களில் அதிகரிக்கும் என்றாலும், 2020-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் நிறுவனம் பணியமர்த்தும் வேகம் குறைந்து இருக்கிறது. ஏஐ செயல்முறைக்கு மாறி வருவதால் கடந்த ஆண்டு டிசிஎஸ் தங்கள் ஒட்டுமொத்த ஊழியர்களில் 2 சதவீதத்தினரை அதாவது 12,000 பேரை பணி நீக்கம் செய்தது.
பணி நீக்கங்கள் தான் அதிகரித்திருக்கிறது.. பணியமர்த்தல் செயல்முறையாவது இனி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதற்கும் முற்றுகட்டாய் அமைகிறது இது போன்ற அறிவிப்புகள். இனி வரும் காலங்களில் ஐடி துறையில் ஒரு வேலையை கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கும் சூழலே நிலவுகிறது. எனவே படித்து முடித்த பட்டதாரிகள் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் ஸ்கில் செட்டை வளர்த்துக் கொண்டால் நல்லது.


Click it and Unblock the Notifications