பெங்களூரு: ஏஐ தொழில்நுட்பத்தால் அதிகம் பாதிக்கப்பட போவது பெங்களூரு நகரம் தான் என ரெடிட் தளத்தில் ஒரு பயனர் வெளியிட்டுள்ள பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் ஐடி தலைநகரமாக பெங்களூரு திகழ்ந்து வருகிறது.
பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களின் அலுவலகங்களும் பெங்களுருவில் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பு தேடி பெங்களூருக்கு குடி பெயர்ந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் ரெடிட் தளத்தில் வெளியாகி உள்ள ஒரு பதிவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படிப்படியாக மனிதர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் குறிப்பாக இதில் அதிகம் பாதிக்கப்பட போவது பெங்களூரு நகரம் தான் என தெரிவித்துள்ளார்.

அடுத்து வரக்கூடிய மாதங்களில் குறைந்த ஊதியத்தில் இருக்கக்கூடிய ஐடி ஊழியர்கள் பலரும் வேலை இழப்பார்கள் என்றும் இதற்கு ஏஐ ஆட்டோமேஷன் தான் காரணமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். பலரும் பணிநீக்கம் செய்யப்படும்போது அவர்கள் சார்ந்து பெங்களூருவில் இயங்கி வரக்கூடிய சிறு சிறு தொழில்கள், ஹாஸ்டல்கள் உள்ளிட்டவை பாதிக்கும் என கூறியுள்ளார்.
அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் பல கோடிகளை முதலீடு செய்து காத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் ஏமாறப் போகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பல ஐடி ஊழியர்கள் பலரும் பணிநீக்கம் செய்யப்படும்போது பெங்களூருவில் வீட்டு வாடகைகளின் மதிப்பு குறையும் என்றும் போக்குவரத்து நெரிசல் அனைத்தும் சீராகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நுழைவு நிலையில் இருக்கக்கூடிய சாஃப்ட்வேர் டெவலப்பர்களின் வேலையை இன்னும் திறமையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் செய்ய முடிகிறது என குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள ஒரு பயனர் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட சாட் பாட்டுகளால் பிபிஓ மற்றும் கால் சென்டர்களில் வேலை பார்த்து வந்த பலரும் வேலையை இழந்துள்ளனர் என கூறியுள்ளார். இருந்தாலும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு பெரிய பிரச்சனை இருக்காது அதன் பிறகு நம்முடைய வேலை முறையே மாறிவிடும் என தெரிவித்துள்ளார்.
ஒரு பயனர் தயவு செய்து ஏஐ வரட்டும் அப்படியாவது பெங்களூருவை சேர்ந்த வீட்டு உரிமையாளர்கள் வாடகைகளை குறைக்கிறார்களா என பார்க்கலாம் என கூறியுள்ளார் . ஒரு பயனர் பெங்களூருவில் வேலை வாய்ப்பு அதிகரித்து இருப்பதால் தான் வீட்டு வாடகை அதிகரிக்கிறது என கூற முடியாது, வாடகைக்கு செல்பவர்களின் நடத்தைதான் இதற்கு காரணம் எனக் கூறியுள்ளார்.
இளைஞர்கள் பலரும் நான்கு ஐந்து பேராக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கும்போது பெரிய வாடகை தொகையாக இருந்தாலும் அவர்கள் பிரித்துக் கொள்கின்றனர், ஆனால் வீட்டு உரிமையாளர்கள் இதுபோல இளைஞர்களுக்கும் குடும்பமாக வருபவர்களுக்கும் ஒரே வாடகை விதிப்பதே காரணம் எனக் கூறியுள்ளார்.
ஏஐ தொழில்நுட்பம் அத்தனை எளிதாக மனிதர்களின் வேலையை பறிக்காது என கூறியுள்ள ஒரு பயனர் நான் அமெரிக்காவில் ஏஐ துறையில் தான் பணிபுரிகிறேன். ஏஐ மாடல்கள் இன்னும் வளர்ச்சி அடைய வேண்டியது நிறைய இருக்கிறது அதற்குள் அதனால் மனிதர்களுக்கு நிகரான வேலையை செய்து விட முடியாது என கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications